பெப்ரவரி
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்பிரவரி அல்லது பெப்பிருவரி (February) என்பது யூலியன், கிரெகொரி நாட்காட்டிகளில் ஆண்டின் இரண்டாவது மாதமாகும். சாதாரண ஆண்டுகளில் இம்மாதம் 28 நாட்களையும், நெட்டாண்டுகளில் 29 நாட்களையும் இது கொண்டுள்ளது. நெட்டாண்டில் வரும் 29-ஆம் நாள் நெடு நாள் என அழைக்கப்படுகிறது. பெப்பிரவரி ஆண்டின் ஐந்து மாதங்களில் 31 நாட்கள் இல்லாத முதல் மாதமும் (ஏனைய நான்கு ஏப்ரல், சூன், செப்டம்பர், நவம்பர் ஆகும்), 30 நாட்களுக்கும் குறைவாக உள்ள ஒரே ஒரு மாதமும் ஆகும். வடக்கு அரைக்கோளத்தில் பெப்பிரவரி குளிர்காலத்தின் மூன்றாவதும் கடைசி மாதமும் ஆகும். தெற்கு அரைக்கோளத்தில், பெப்பிரவரி கோடைகாலத்தின் மூன்றாவதும் கடைசியும் ஆகும்.
வரலாறு
பெப்பிரவரி மாதம் உரோமானிய மாதமான பெப்ருவாரியசு (Februarius) இலத்தீன் சொல்லான பெப்ரூம் (februum) ஆகியவற்றின் பெயரால் பெயரிடப்பட்டது, இதற்கு "சுத்திகரிப்பு" என்று பொருள்.[1] இது பெப்பிரவரி 15 அன்று (முழுநிலவு) பழைய சந்திர உரோமானிய நாட்காட்டியில் நடத்தப்பட்ட பெப்ருவா என்ற சுத்திகரிப்பு சடங்கு மூலம் பெயரிடப்பட்டது. உரோமானியர்கள் முதலில் குளிர்காலத்தை மாதமில்லாக் காலமாகக் கருதியதால், உரோமானிய நாட்காட்டியில் சேர்க்கப்பட்ட கடைசி இரண்டு மாதங்கள் சனவரியும் பெபிரவரியும் ஆகும். இவை கிமு 713 இல் நுமா பாம்பிலியசால் சேர்க்கப்பட்டன. திசம்விர்களின் காலம் வரை (அண். கிமு 450), அது இரண்டாவது மாதமாக மாறும் வரை பெப்பிரவரி ஆண்டின் கடைசி மாதமாக இருந்தது. சில சமயங்களில் பெப்பிரவரி மாதம் 23 அல்லது 24 நாட்களாகத் துண்டிக்கப்பட்டது, மேலும் 27-நாள் இடைக்கால மாதமான 'இன்டர்கலாரிசு' (Intercalaris), அவ்வப்போது பிப்ரவரிக்குப் பிறகு பருவங்களுடன் ஆண்டை மறுசீரமைக்கச் செருகப்பட்டது.
யூலியன் நாட்காட்டியை நிறுவிய சீர்திருத்தங்களின் கீழ், இன்டர்கலாரிசு ஒழிக்கப்பட்டது, நெட்டாண்டுகள் ஒவ்வொரு நான்காவது ஆண்டும் வழக்கமாக நிகழ்ந்தன, நெட்டாண்டுகளில் பெப்பிரவரி 29-ஆவது நாளைப் பெற்றது. அதன்பிறகு, இது நாட்காட்டி ஆண்டின் இரண்டாவது மாதமாக இருந்தது, அதாவது ஒரு ஆண்டில் ஒரே பார்வையில் நாட்காட்டியில் வரிசையாக மாதங்கள் காட்டப்படும் (சனவரி, பெப்பிரவரி, மார்ச்சு, ..., திசம்பர்). இடைக்காலத்தில், எண்ணிடப்பட்ட அனோ டொமினி ஆண்டு மார்ச் 25 அல்லது திசம்பர் 25 இல் தொடங்கியபோதும், பன்னிரண்டு மாதங்களும் வரிசையாகக் காட்டப்படும் போதெல்லாம் இரண்டாவது மாதம் பெப்பிரவரியாக இருக்கும். கிரெகொரியின் நாட்காட்டி சீர்திருத்தங்கள் எந்த ஆண்டுகள் நெட்டாண்டுகள் என்பதைத் தீர்மானிக்கும் அமைப்பில் சிறிய மாற்றங்களைச் செய்தன, ஆனால் பிப்ரவரி 29-ஐயும் உள்ளடக்கியது.
வடிவங்கள்
சாதாரண ஆண்டுகளில் 28 நாட்களே உள்ளதால், ஒரே ஒரு முழுநிலவு இல்லாமல் கடந்து செல்லக்கூடிய ஒரே மாதம் பெப்பிரவரி ஆகும். முழுநிலவின் நாள் மற்றும் நேரத்தை நிர்ணயிப்பதற்கான அடிப்படையாக ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்தைப் பயன்படுத்தி, இந்நிகழ்வு கடைசியாக 2018 இல் நடந்தது, அடுத்ததாக 2037 இல் நிகழும்.[2][3] அமாவாசையைப் பொறுத்தவரையிலும் இதுவே உண்மை: இது கடைசியாக 2014 இல் நடந்தது, அடுத்ததாக 2033 இல் நடக்கும்.[4][5]
ஆறு ஆண்டுகளில் ஒன்று, பதினொரு ஆண்டுகளில் இரண்டு என்ற இடைவெளியில், சரியாக நான்கு முழு 7-நாள் கிழமைகளைக் கொண்டுள்ள ஒரே மாதம் பெப்பிரவரி ஆகும். ஒரு திங்கட்கிழமையில் தங்கள் கிழமையைத் தொடங்கும் நாடுகளில், இது வெள்ளிக்கிழமையில் தொடங்கும் ஒரு சாதாரண ஆண்டின் ஒரு பகுதியாக நிகழ்கிறது, இதில் பெப்பிரவரி 1 ஒரு திங்கட்கிழமையாகவும், பெப்பிரவரி 28 ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆகவும் இருக்கும்; இதுபோன்ற மிக அண்மைய நிகழ்வு 2021 ஆகும், அடுத்தது 2027 ஆக இருக்கும். ஞாயிற்றுக்கிழமையில் தங்கள் கிழமையைத் தொடங்கும் நாடுகளில், இது வியாழனில் தொடங்கும் ஒரு சாதாரண ஆண்டில் நிகழ்கிறது; மிக அண்மைய இவ்வாறான நிகழ்வு 2015, அடுத்த நிகழ்வு 2026 ஆகும். இந்த முறைமையானது நெட்டாண்டு முறை தவிர்க்கப்பட்ட நெட்டாண்டால் உடைக்கப்பட்டது, ஆனால் 1900 ஆம் ஆண்டிலிருந்து எந்த ஒரு நெட்டாண்டும் தவிர்க்கப்படவில்லை, மற்றவை 2100 வரை தவிர்க்கப்படாது.
இராசிகள்
பெப்பிரவரி மாத இராசிகள் கும்பம் (பெப்ரவரி 18 வரை), மீனம் (பெப்ரவரி 19 முதல்) ஆகும்.[6]
பிறப்புப் பூக்கள் ஊதா (வயலா), பொதுவான பிரிமுலா வல்காரிசு,[7] ஐரிசு[8] ஆகியனவாகும். இதன் பிறப்புக்கல் செவ்வந்திக்கல் ஆகும்.
சிறப்பு மாதம்
- ஐக்கிய அமெரிக்கா, கனடா: கறுப்பு சரித்திர மாதம்
- நூலக விரும்பிகளின் மாதம்
- வேலன்டைன் நாள் (பெப்ரவரி 14)
- அனைத்துலக தாய்மொழி நாள் (பெப்ரவரி 21)
மேற்கோள்கள்
- ↑ "February | Definition of February by Merriam-Webster". Merriam-webster.com. Archived from the original on 2016-09-18. பார்க்கப்பட்ட நாள் 2016-09-17.
- ↑ "Moon Phases 2018 – Lunar Calendar for London, England, United Kingdom". www.timeanddate.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-08-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-25.
- ↑ "Moon Phases 2037 – Lunar Calendar for London, England, United Kingdom". Archived from the original on 2018-03-03. பார்க்கப்பட்ட நாள் 2018-03-03.
- ↑ "Moon Phases 2014 – Lunar Calendar for London, England, United Kingdom". Archived from the original on 2017-10-26. பார்க்கப்பட்ட நாள் 2017-10-26.
- ↑ "Moon Phases 2033 – Lunar Calendar for London, England, United Kingdom". Archived from the original on 2017-10-26. பார்க்கப்பட்ட நாள் 2017-10-26.
- ↑ "February Birthstone | Amethyst". Americangemsociety.org. Archived from the original on 2013-06-30. பார்க்கப்பட்ட நாள் 2016-09-17.
- ↑ "Birth Month Flowers". Babiesonline.com. Archived from the original on 2016-08-05. பார்க்கப்பட்ட நாள் 2016-09-17.
- ↑ "Birth Month Flower of February - the Iris". Archived from the original on 2018-10-16. பார்க்கப்பட்ட நாள் 2018-10-16.
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர் |