டெலஸ்ஃபோருஸ் (திருத்தந்தை)
புனித டெலஸ்ஃபோருஸ் Saint Telesphorus | |
---|---|
8ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | கிபி 126 |
ஆட்சி முடிவு | கிபி 137 |
முன்னிருந்தவர் | புனித முதலாம் சிக்ஸ்துஸ் |
பின்வந்தவர் | ஹைஜீனஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | டெலஸ்ஃபோருஸ் |
பிறப்பு | உறுதியாகத் தெரியவில்லை; கிரேக்க நாடு |
இறப்பு | கிபி 137; உரோமை, இத்தாலியா |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | சனவரி 5 |
புனித டெலஸ்ஃபோருஸ் (Pope Saint Telesphorus) என்னும் திருத்தந்தை கி.பி. 126 (அல்லது 127)இலிருந்து 136 (அல்லது 137, அல்லது 138) வரை ஆட்சிசெய்தார். அவரது ஆட்சிக் காலத்தில் ஹேட்ரியன் மற்றும் அண்டோனியஸ் பீயுஸ் என்போர் உரோமை மன்னர்களாக ஆட்சி செய்தனர். டெலஸ்ஃபோருஸ் பிறப்பால் கிரேக்க நாட்டைச் சார்ந்தவர்[1].
- டெலஸ்ஃபோருஸ் (பண்டைக் கிரேக்கம்: Telesphorus என்னும் பெயர் கிரேக்கத்தில் "குறிக்கோளில் ஆர்வமுள்ளவர்" என்னும் பொருள்படும்.
ஏழாம் திருத்தந்தை
[தொகு]மரபுப்படி, டெலஸ்ஃபோருஸ் புனித பேதுரு வழிவந்த கத்தோலிக்க திருச்சபையின் எட்டாம் திருத்தந்தை ஆவார். "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டின்படி, அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் கடுந்தவம் புரிந்த துறவியாக (anchorite) இருந்தார்.
தொடக்க கால இறையியல் அறிஞர் இரனேயுஸ் என்பவரின் கூற்றுப்படி, டெலஸ்ஃபோருஸ் மறைச்சாட்சியாக உயிர்நீத்தார். தொடக்க காலத் திருத்தந்தையர் எல்லாருமே "மறைச்சாட்சி" என்னும் பட்டம் கொண்டிருப்பினும் (காண்க: "திருத்தந்தையர் நூல்"), இரனேயுஸ் என்பவர் டெலஸ்ஃபோருசுக்குத் தான் முதன்முறையாக இச்சிறப்புப் பட்டத்தை வழங்குகிறார்.
பண்டைய கிறித்தவ ஆதாரங்கள்
[தொகு]பண்டைய கிறித்தவ எழுத்தாளர் யூசேபியஸ் என்பவர் தம் "திருச்சபை வரலாறு" என்னும் நூலில், ஹேட்ரியன் மன்னனின் ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில் திருத்தந்தை டெலஸ்ஃபோருஸ் பொறுப்பேற்றார் என்று குறிப்பிடுகிறார். அதுபோலவே, அவர்தம் இறப்பு அண்டோனியஸ் பீயஸ் என்னும் மன்னனின் ஆட்சியின் முதல் ஆண்டில் நிகழ்ந்தது என்று கூறுகிறார். ஆகவே, இந்த ஆதாரத்தின்படி, டெலஸ்ஃபோருஸ் கி.பி. 128-129இல் ஆட்சியைத் தொடங்கினார் என்றும், 138-139இல் இறந்தார் என்றும் அறிகிறோம்.
உரோமை மறைச்சாட்சியர் நூல் (Roman Martyrology), டெலஸ்ஃபோரின் விழா நாள் சனவரி 5 என்று குறிப்பிடுகிறது. கிரேக்க சபையில் அவர் விழா பெப்ருவரி 22ஆம் நாள் ஆகும்.
சீர்திருத்தங்கள்
[தொகு]திருத்தந்தை கீழ்வரும் சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார் என்றொரு மரபு உள்ளது:
- கிறிஸ்து பிறப்பு விழா நள்ளிரவில் கொண்டாடல்;
- இயேசு உயிர்த்தெழுந்த விழா ஞாயிற்றுக் கிழமை கொணடாடப்படல்;
- உயிர்த்தெழுதல் விழாவுக்கு முந்திய ஏழு வாரங்களைத் தவக்காலமாக அனுசரித்தல்;
- "உன்னதங்களிலே" கீதத்தைத் திருப்பலியின்போது பாடுதல்.
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) தருகின்ற மேற்கூறிய தகவலுக்குப் போதிய வரலாற்று ஆதாரம் இல்லை என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடும் நாள் பற்றிய விவாதம்
[தொகு]யூசேபியஸ் என்னும் பண்டைய கிறித்தவ அறிஞர் கீழ்வரும் செய்தியைக் குறித்துள்ளார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்நாளில் கொண்டாடுவது என்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்பொருள் குறித்து புனித இரனேயஸ் என்னும் பண்டைய கிறித்தவ அறிஞர் திருத்தந்தை முதலாம் விக்டர் என்பவருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு சிறு பகுதியின் படி, டெலஸ்ஃபோர் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடிய உரோமை ஆயர்களுள் ஒருவர் ஆவார். வேறு பலர் அவ்விழாவை யூத நாட்காட்டியைப் பின்பற்றி, பாஸ்கா விழாவாக வாரத்தின் பிற நாள்களில் கொண்டாடினர். இருப்பினும் விக்டரைப் போலன்றி, டெலஸ்ஃபோருஸ் வேறு நாள்களில் உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடியவர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தார்.
கார்மேல் சபையின் பாதுகாவலர்
[தொகு]ஒரு மரபுப்படி, டெலஸ்ஃபோருஸ் பழைய ஏற்பாட்டில் வரும் கார்மேல் மலையில் வனத்துறவியாக வாழ்ந்தார். எனவே, கார்மேல் சபைத் துறவியர் அவரைத் தம் சபையின் பாதுகாவலர்களுள் ஒருவராகக் கருதி மதிக்கின்றனர்.
திருத்தந்தை டெலஸ்ஃபோருஸ் புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆதாரங்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- (Latin) The Works of Pope Telesphorus (from Documenta Catholica Omnia)
- "Pope St. Telesphorus" Catholic Encyclopedia