Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கீட்டோ அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரூவிக் அமிலம் (மேல்), அசிட்டோ அசிட்டிக் அமிலம் மற்றும் லெவலினிக் அமிலம் (கீழ்)

கீட்டோ அமிலங்கள் (Keto acids) என்பவை ஒரு கார்பாக்சிலிக் அமிலக் குழுவையும் ஒரு கீட்டோன் குழுவையும் தன்னகத்தில் கொண்டுள்ள கரிமச் சேர்மங்களைக் குறிக்கும் [1]. இவற்றை ஆக்சோ அமிலங்கள் என்றும் அழைக்கலாம். கீட்டோ அமிலங்கள் பலவற்றில் இடம்பெற்றுள்ள கீட்டோ குழுக்கள் நீரேற்றம் பெற்றவையாக உள்ளன. ஆல்பா கீட்டோ அமிலங்கள் குறிப்பாக கிரெப்சு சிட்ரிக் அமிலச் சுழற்சி, சர்க்கரைச் சிதைவு போன்ற உயிரியல் செயல்பாடுகளில் பங்கு கொள்கின்றன [2].

  • ஆல்பா-கீட்டோ அமிலங்கள் அல்லது கார்பாக்சிலிக் அமிலக் குழுவிற்கு அடுத்ததாக கீட்டோ குழு இடம்பெற்றுள்ள பைருவிக் அமிலம் போன்ற 2- ஆக்சோ அமிலங்கள் போன்றவை பொதுவாகக் காணப்படும் கீட்டோ அமில வகைகள் ஆகும் [3]. கிரெப்சு சுழற்சியின் பகுதிப்பொருளான ஆக்சலோ அசிட்டிக் அமிலம் ஒரு முக்கியமான ஆல்பா கீட்டோ அமிலமாகும். குளூட்டாமிக் அமிலத்தின் வழிப்பெறுதியான 5 கார்பன் அணுக்கள் கொண்ட ஆல்பா-கீட்டோகுளூட்டாரேட்டும் மற்றொரு முக்கியமான ஆல்பா கீட்டோ அமிலமாகும். இது ஓர் இணைநொதியாக செயல்பட்டு செல் தொடர்பாடல் மற்றும் அவற்றின் ஒருங்கிணைப்பில் பங்கேற்கிறது. அமினோ குழுக்களை கீட்டோ அமிலத்திற்கு மாற்றும் அமின் மாற்ற வினைகளிலும் பொதுவாக இது பயன்படுத்தப்படுகிறது [4]. ஆல்பா-கீட்டோ அமிலங்கள் அசைலேற்ற முகவர்களாக விரிவான வேதியியல் பயன்பாடுகளைக் கொண்டுள்ளன [5].
  • பீட்டா-கீட்டோ அமிலங்கள் அல்லது 3-ஆக்சோ அமிலங்கள் என்பவை மற்றொரு கீட்டோ அமில வகையாகும். இவற்றில் கீட்டோ குழு கார்பாக்சிலிக் அமிலத்திலிருந்து இரண்டாவதாக உள்ள கார்பன் அணுவுடன் இணைந்துள்ளது. அசிட்டோ அசிட்டிக் அமிலம் இதற்கு ஓர் உதாரணமாகும். கிளெய்சன் ஒடுக்க வினை வழியாக இவை உருவாக்கப்படுகின்றன.
  • காமா-கீட்டோ அமிலங்கள் அல்லது 4-ஆக்சோ அமிலங்கள் என்பவை கீட்டோ அமிலங்களில் மற்றொரு வகையாகும். இவற்றில் கீட்டோ குழு கார்பாக்சிலிக் அமிலத்திலிருந்து மூன்றாவதாக உள்ள கார்பன் அணுவுடன் இணைந்துள்ளது. லெவலினிக் அமிலம் இதற்கு ஓர் உதாரணமாகும்.

உயிரினங்களின் வளர்சிதை மாற்றத்தில் பல்வேறு வகையான உட்சேர்க்கைப் பாதைகளில் கீட்டோ அமிலங்கள் தோன்றுகின்றன. உட்கொள்ளப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போவைதரேட்டு அளவு குறைவாக இருக்கும்போது சேமிக்கப்பட்ட கொழுப்புகள் மற்றும் புரதங்கள் ஆற்றல் உற்பத்தியின் முதன்மை ஆதாரங்களாக உள்ளன, புரதங்களிலிருந்து கிடைக்கும் குளுக்கோசு புத்தாக்க அமினோ அமிலங்கள் குளுக்கோசாக மாற்றப்படுகின்றன. கீட்டோன் புத்தாக்க அமினோ அமிலங்கள் ஆல்பா கீட்டோ அமிலங்களாகவும் கீட்டோன்களாகவும் அமீன் நீக்கம் செய்யப்படுகின்றன. ஆல்பா கீட்டோ அமிலங்கள் முதன்மையாக கல்லீரல் உயிரணுக்களுக்குத் தேவையான ஆற்றலாகவும், கொழுப்பு அமிலத் தொகுப்பு வினையிலும் கல்லீரலில் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Franz Dietrich Klingler, Wolfgang Ebertz "Oxocarboxylic Acids" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a18_313
  2. Nelson, D. L.; Cox, M. M. "Lehninger, Principles of Biochemistry" 3rd Ed. Worth Publishing: New York, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57259-153-6.
  3. Kerber, Robert C.; Fernando, Marian S. (October 2010). "α-Oxocarboxylic Acids". Journal of Chemical Education 87 (10): 1079–1084. doi:10.1021/ed1003096. https://archive.org/details/sim_journal-of-chemical-education_2010-10_87_10/page/1079. 
  4. Hewitson, K.S.; McNeill, L.A.; Elkins, J.M.; Schofield, C.J. (1 June 2003). "The role of iron and 2-oxoglutarate oxygenases in signalling". Biochemical Society Transactions 31 (3): 510–515. doi:10.1042/bst0310510. 
  5. Penteado, Filipe; Lopes, Eric F.; Alves, Diego; Perin, Gelson; Jacob, Raquel G.; Lenardão, Eder J. (16 April 2019). "α-Keto Acids: Acylating Agents in Organic Synthesis". Chemical Reviews. doi:10.1021/acs.chemrev.8b00782. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீட்டோ_அமிலம்&oldid=4034185" இலிருந்து மீள்விக்கப்பட்டது