1907 பஞ்சாப் கலவரம்
1907 பஞ்சாப் கலவரம் என்பது, பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில், 1907 ஆம் ஆண்டு அக்காலப் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட கலவரத்தைக் குறிக்கும். இது முக்கியமாக 1906 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியேற்றச் சட்டத்துக்கு (Colonisation bill) எதிராக உருவானது. இதுவே பஞ்சாபில் விடுதலை இயக்கத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படுகிறது. லாலா லஜபதி ராய், சர்தார் அஜித் சிங் போன்றோர் இவ்வியக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தனர்.[1]
குடியேற்றச் சட்டம்
[தொகு]குடியேற்றச் சட்டம் 1906ம் ஆண்டு நிறைவேறியது. இந்தச் சட்டம், ஏற்கெனவே நகரப்பகுதி உயர் குடியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த பஞ்சாப் நில உரிமை மாற்றச் சட்டம் (Punjab Land Alienation act) நிறைவேற்றப்பட்ட பின்னர் கொண்டுவரப்பட்டது. குடியேற்றச் சட்டத்தின்படி இறக்கும் ஒருவருக்கு நேரடி வாரிசு இல்லாவிட்டால் அவரது நிலம் அரசுக்குச் சொந்தமாகும். அரசாங்கம் அதைப் அரச நிறுவனங்களுக்கோ தனியாருக்கோ விற்க முடியும். இது அப்பகுதியில் நிலவிய சமூக நிலைமைக்கு எதிராக இருந்ததால் அதை எல்லாத் தரப்பினரும் எதிர்த்தனர்.
போராட்டம்
[தொகு]பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் லாலா லஜபதி ராயின் தலைமையில் இடம்பெற்றது. அவர் தீவிர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார். முதல் எதிர்ப்பு நடவடிக்கை இந்தச் சட்டத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டது எனக் கருதப்பட்ட செனாப் குடியேற்றப் பகுதியில் ஒழுங்குசெய்யப்பட்டது. இந்த முதல் எதிர்ப்பில், பல அமைப்புக்கள் தமது குறைபாட்டைத் தீர்த்துவைக்குமாறு கோரிக் கோரிக்கை மனுக்களை அரசாங்கத்துக்குக் கொடுத்தன. ஆனால், அரசாங்கம் இதற்குச் செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து லயால்பூரில் இன்னொரு எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. இப்போராட்டம், பல்வேறு இரகசிய அமைப்புக்கள் உருவாக வழிவகுத்தது. அஞ்சுமான்-இ-முகிபான்-இ-வத்தன் என்பது இவற்றில் ஒன்று. ஜாட் சீக்கியரான அஜித் சிங் இதை உருவாக்கினார். இவருக்கு லாலா லஜபதி ராயின் ஆதரவு இருந்ததாக நம்பப்பட்டது. இக்காலத்தில் பல மக்கள் போராட்டங்கள் இடம்பெற்றன. இறுதியில் ராயும், அஜித் சிங்கும் நாடுகடத்தப்பட்டனர்.
உசாத்துணைகள்
[தொகு]- The Indian Army and the Making of Punjab By Rajit K Mazumder. p. 203. Published by Orient Longman, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7824-059-9
- The Punjab Disturbances of 1907: The Response of the British Government in India to Agrarian Unrest. N. Gerald Barrier. Modern Asian Studies, Vol. 1, No. 4 (1967), pp. 353–383
- The Garrison State: The Military, Government and Society in Colonial Punjab. by Tai Yong Tan. p. 95. Published by SAGE, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7619-3336-0.
- The History of British India: A Chronology.by John F. Riddick. p. 92 Published by Greenwood Publishing Group, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-32280-5.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haryana Samvad பரணிடப்பட்டது 27 ஆகத்து 2018 at the வந்தவழி இயந்திரம், Jan 2018.