லால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது | 1984 |
---|---|
அமைவிடம் | குஜராத் பல்கலைக்கழகம் எதிரில், நவரங்கபுரா, அகமதாபாத், இந்தியா 380009 |
இயக்குனர் | ரத்தன் பாரிமூ |
மேற்பார்வையாளர் | புல்புல் கிங்லாஜியா |
வலைத்தளம் | www |
லால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம் (Lalbhai Dalpatbhai Museum) சுருக்கமாக எல்.டி அருங்காட்சியகம், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள பண்டைய மற்றும் சமகால நாணயங்களின் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் இந்திய சிற்பங்கள், வெண்கலப் பொருள்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள், வரைபடங்கள், சிறிய அளவிலான ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மணி வேலைப்பாடுகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [1]
வரலாறு
[தொகு]1956 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட காலம் முதல் லால்பாய் தல்பத்பாய் இந்தியவியல் நிறுவனம் பல்வேறு வகையான அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கலைப்பொருட்களை சேகரித்து பாதுகாத்து வருகிறது, அவற்றில் சில லல்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் உருவாவதற்கு காரணமான இரண்டு குறிப்பிடத்தக்க நபர்களாக ஒரு துறவியும் அறிஞருமான முனி புன்யவிஜயாஜி மற்றும் அனைவரும் அறிந்த அகமதாபாத்தின் தொழிலதிபரான ஷெத் கஸ்தூர்பாய் லால்பாய் ஆகிய இருவரையும் கூறலாம். பல ஆண்டுகளாக அதன் கலைப்பொருள்களின் சேகரிப்புகள் வளர்ந்து வந்த நிலையில் அறங்காவலர் குழு (லால்பாய் தல்பத்பாய் பாரதிய சமஸ்கிருதி வித்யமந்திர்), அதன் சேகரிப்பை காட்சிப்படுத்துவதற்காக ஒரு தனி அருங்காட்சியகம் தேவை என்பதை நன்கு உணர்ந்தது. இதன் விளைவாக, தற்போதுள்ள நிறுவனத்தின் கட்டிடத்திற்கு அருகில் ஒரு புதிய அருங்காட்சியகக் கட்டிடம் கட்டப்பட்டது, இது சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பால்கிருஷ்ண தோஷி அவர்களால் வடிவமைக்கப்பட்டதாகும். புதிய அருங்காட்சியக கட்டிடத்தில் உள்ள கலைப் பொருள் சேகரிப்புகள் 1984 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.[2]1985 ஆம் ஆண்டில் பிரஜ்குமார் நேரு (குஜராத் ஆளுநர்) அவர்களால் முறையாக திறந்து வைக்கப்பட்டது.
அமைவிடம்
[தொகு]லால்பாய் தல்பத்பாய் பாரதிய சமஸ்கிருதி வித்யமந்திரின் லால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம் அகமதாபாத்தில் உள்ள லால்பாய் தல்பத்பாய் இந்தியவியல் நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது. இது நகரின் மேற்கு பகுதியில் ஒரு பரந்த வளாகத்தில் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களைக் கொண்ட ஒரு பகுதியிலும், குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் லால்பாய் தல்பத்பாய் பொறியியல் கல்லூரிக்கு அருகிலும் அமைந்துள்ளது.
இது தொடருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், விமான நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. எனவே, அகமதாபாத் நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த அருங்காட்சியகத்திற்கு எளிதாக வர முடியும்.
பார்வையாளர் நேரம்
[தொகு]இந்த அருங்காட்சியகம் திங்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். [3]
காட்சிக்கூடங்கள்
[தொகு]புகழ்பெற்ற நன்கொடையாளர்களின் பங்களிப்பின் காரணமாக அருங்காட்சியகத்தில் பல காட்சிப்பொருள்கள் சேர்ந்துள்ளன. அந்த பங்களிப்பாளர்களின் பங்களிப்பிற்கு ஒப்புகை செய்வதற்கும், அவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்துவதற்கும், அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காட்சியகங்கள் மற்றும் பிரிவுகள் பெயரிடப்பட்டுள்ளன. அவை (1) முனி புன்யவிஜயாஜி காட்சிக்கூடம் (2) மாதுரி டி. தேசாய் காட்சிக்கூடம் (3) கஸ்தூர்பாய் லால்பாய் இந்திய வரைபடங்களின் தொகுப்பு (4) லீலாவதி லால்பாய் மர வேலைப்பாடுகளின் தொகுப்பு (5) அரவிந்த் லால்பாய் தொகுப்பு (6) பிரியகந்த் டி. முன்ஷா நாணயவியல் காட்சிக்கூடம் (7) கோபி-ஆனந்த் மணி வேலைப்பாடுகள் தொகுப்பு என்பனவாகும்.
பாதுகாப்பு ஆய்வகம்
[தொகு]அருங்காட்சியகத்தின் மிதமான பாதுகாப்பு ஆய்வகத்தில் காகிதத்தில் சிறிய அளவிலான ஓவியங்களை பாதுகாப்பதற்கான வசதிகள் உள்ளன. கல் சிற்பங்கள் மற்றும் உலோகப் பொருட்களை சுத்தம் செய்து பாதுகாக்கும் பணி இங்கு மேற்கொள்ளப்படுகிறது. [1] [2]
கலை குறிப்பு நூலகம்
[தொகு]இந்த அருங்காட்சியகத்தில் கலை குறிப்பு நூலகம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக வெளியான அரிய நூல்கள் உள்ளிட்ட பல நூல்கள் இங்கு உள்ளன. [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Idmuseum
- ↑ 2.0 2.1 "Museums of India". Archived from the original on 2020-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
- ↑ holidaysdna
வெளி இணைப்புகள்
[தொகு]- எல்.டி பரணிடப்பட்டது 2016-10-09 at the வந்தவழி இயந்திரம் அருங்காட்சியக வலைப்பதிவு
- எல்.டி மிஅருங்காட்சியக அண்ட்ராய்டு மொபைல் பயன்பாடு
- எல்.டி[தொடர்பிழந்த இணைப்பு] அருங்காட்சியக பிளாக்பெர்ரி மொபைல் பயன்பாடு
- டைம்ஸ் ஆஃப் இந்தியா : ஏ.எஸ்.ஐ கடன் பெற லல்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம்
- டி.என்.ஏ செய்தித்தாள் : கலை மற்றும் பண்பாடு குறித்த எல்.டி. அருங்காட்சியக விரிவுரைத் தொடர் - டாக்டர் கௌரி பரிமூ கிருஷ்ணன் பரணிடப்பட்டது 2017-05-10 at the வந்தவழி இயந்திரம்