மூட்டழற்சி (Arthritis) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில், அழற்சியினால் ஏற்படும் மூட்டுப் பிறழ்வைக் குறிக்கிறது[1][2]. நூற்றுக்கும் அதிகமான மூட்டழற்சி வகைகள் உள்ளன[3][4]. மிகச் சாதாரணமாகக் காணப்படுவது மூட்டுகளைச் சிதைக்கின்ற முதுமை மூட்டழற்சியாகும். இது, மூட்டுகளுக்கு ஏற்படுகின்ற பேரதிர்ச்சி, நோய்த்தொற்று அல்லது முதுமை ஆகிய காரணங்களால் உருவாகலாம். மூட்டழற்சியின் பிற வடிவங்களாக முடக்கு வாதம், தடிப்புத் தோல் அழற்சி மற்றும் சிரங்கு மூட்டழற்சி (Psoriatic arthritis), பிற தன்னெதிர்ப்பு நோய்களுடன் தொடர்புடைய நிலைகளைக் கூறலாம். அழுகலுற்ற மூட்டழற்சி (Septic arthritis) மூட்டுகளில் நோய்த்தொற்று ஏற்படுவதால் உண்டாகிறது.
மூட்டழற்சி உள்ள நோயாளிகளின் பொதுவான முறையீடு மூட்டு வலியாகும். பொதுவாக, வலியானது தொடர்ந்தும், பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட மூட்டுப் பகுதிகளிலும் காணப்படலாம். இத்தகைய வலி, மூட்டுகளைச் சுற்றி ஏற்படும் அழற்சி, மூட்டுகளுக்கு நோயினால் ஏற்படும் பாதிப்பு, தினமும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம், வலி நிறைந்த மூட்டுகளை உபயோகிப்பதால் ஏற்படும் தசைப் பிடிப்புகள், களைப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது.