தளிர்விடும் அத்தி மர உவமை
தளிர்விடும் அத்தி மர உவமை என்பது இயேசுவின் உவமைகளுள் ஒன்றாகும். புதிய ஏற்பாட்டின் மூன்று நற்செய்தி நூல்களில் இடம்பெறுகின்றது. மத்தேயு 24:32-35, மாற்கு 13:28-31 மற்றும் லூக்கா 21:29-33இல் இவ்வுவமை இடம் பெறுகின்றது. இது இறையரசு பற்றிய அத்தி மரம் குறித்த உவமையாகும். இதே அத்தி மரம் குறித்த கனிகொடா அத்திமரம் உவமை என்னும் வேறு ஓர் உவமையும் உள்ளது.[1][2]
உவமையின் விவரிப்பு
[தொகு]லூக்கா நற்செய்தியில் இவ்வுவமை பின்வருமாறு உள்ளது:
இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமை சொன்னார்: ' அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.' மேலும் இயேசு, ' உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் ' என்றார்.
– லூக்கா 21:29-33, பொது மொழிபெயர்ப்பு