சோலோன்
சோலோன் (கி.மு 638—கி.மு.558) என்பவர் கிரேக்க நாட்டின் ஏதென்சின் அரசியல்வாதி, சட்ட நிபுணர், கவிஞர் ஆவார். நெருக்கடியான மற்றும் குழப்பமான நிலையில் இருந்த ஏதென்சில் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் பல மாற்றங்கள் செய்தவர்.[1]
வாழ்க்கைக்குறிப்பு
[தொகு]சோலோன் அட்டிக்காவில் பிரபு வம்சத்தில் பிறந்தார். ஆர்கோன் பதவியை ஏற்குமாறு ஏதென்சில் வசித்த நடுத்தர வகுப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்பதவியை சோலோன் ஏற்றார்.
கி.மு.594 முதல் 572 வரை சோலோன் அப்பதவியில் இருந்து ஆட்சிப் புரிந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அரசியல் சட்டத்தில் சீர் திருத்தம், பொருளியல் சீர்த்திருத்தம், ஒழுக்க முறையில் சீர்திருத்தம் எனப் பலவற்றைச் செய்தார். உலகத்தில் சமத்துவம் நிலைபெற்றுவிட்டால் யுத்தம் வராது என்று சோலோன் கூறி வந்தார்.
ஆற்றியப் பணிகள்
[தொகு]சட்டத்துக்கு முன்னர் ஆத்தினியா மக்கள் அனைவரும் சமம் என அறிவித்தார்.
பணக்காரர்களையும் ஏழைகளையும் சமரசப்படுத்தினார். கடன்கள் பெற்றதற்காக அடிமைகள் ஆகும் வழக்கத்தை ஒழித்தார்.
அடிமைகளை மீட்டு மறு வாழ்வு கொடுத்தார்.
நாணய மாற்று விகிதத்தைத் திருத்தி அமைத்தார்.
எந்த வேலையும் செய்யாமல் வாளாவிருக்கும் மனிதர்களைக் குற்றவாளிகள் என அறிவிக்கச் செய்தார்.
உள்நாட்டில் பொருளியல் வளர்சசி அடைய வெளிநாட்டில் உள்ள தொழில் முனைவோர்களை வரவழைத்து பொருள் வளத்தைப் பெருக்கினார்.
குடிமக்கள் அனைவரும் அவரவர் செல்வம், வருமானம் ஆகியவற்றைப் பொறுத்து நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டனர். நான்காவது வகுப்பினர் மட்டும் வரிகள் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர்.
போரில் மாண்டவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியனவற்றைக் கிடைக்கச் செய்தார்.
ஏழைகள் பணக்காரர்கள் வேறுபாடு இல்லாமல் 30 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அனைவரும் நீதிமான்களாக அமர்ந்து நீதி வழங்க ஏற்பட்டு செய்தார்.
சோலோன் ஆட்சிக்குப் பிறகு ஆத்தினிய அரசியலில் குழப்பமும் சண்டைகளும் வன்முறையும் ஏற்பட்டன.
சான்றாவணம்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]- கிரீஸ் வாழ்ந்த வரலாறு நூல்-ஆசிரியர் வெ.சாமிநாத சர்மா, வளவன் பதிப்பகம்,தியாகராயர் நகர், சென்னை-600017