Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சூவே குகை

ஆள்கூறுகள்: 44°23′15″N 4°24′51″E / 44.38750°N 4.41417°E / 44.38750; 4.41417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூவே-பூ-தார்க் குகை
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
அமைவிடம்ஆர்தேசு, பிரான்சு
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: i, iii
உசாத்துணை1426
பதிவு2014 (38-ஆம் அமர்வு)
பரப்பளவு9 ha
Buffer zone1,353 ha
Websitearcheologie.culture.fr/chauvet/en
ஆள்கூறுகள்44°23′15″N 4°24′51″E / 44.38750°N 4.41417°E / 44.38750; 4.41417
சூவே குகை is located in பிரான்சு
சூவே குகை
பிரான்சினுள் அமைவிடம்

சூவே-பூ-தார்க் குகை (பிரெஞ்சு மொழி: Grotte Chauvet-Pont d'Arc, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ɡʁɔt ʃovɛ pɔ̃ daʁk]) என்பது தென்மேற்குப் பிரான்சின் அர்தேசு திணைக்களத்தில் அமைந்துள்ள ஒரு குகையாகும். இக் குகை உலகின் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ள உருக்களுடனான குகை ஓவியங்கள் சிலவற்றையும்,[1] மேலைப் பழங்கற்கால வாழ்க்கை தொடர்பான ஆதாரங்களையும் கொண்டுள்ளது.[2] இது வலூ-பூ-தார்க் கொமியூனுக்கருகில், ஆர்தேசு ஆற்றின் முன்னைய ஆற்றுப் படுகையின் மேலுள்ள சுண்ணாம்புப் பாறைச் சரிவின் மேல், கோர்சசு த லார்தேசில் அமைந்துள்ளது.

டிசம்பர் 18, 1994ல் கண்டறியப்பட்ட இது மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக் கலையைக் கொண்ட களமாகக் கருதப்படுகிறது. ஐ.நா.வின் பண்பாட்டு முகவர் அமைப்பான யுனெசுகோ, இக் களத்தை சூன் 22, 2014ல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[3] முதன்முதலில் இக்குகை, மூன்று குகை ஆய்வாளர்களான, எலியட் புரூனல்-தெசாம்ப்சு, கிறித்தியன் இல்லயர் மற்றும் சீன்-மரீ சூவே ஆகியோரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இவர்களுள் சூவேவின் பெயரேஎ இக்குகைக்குச் சூட்டப்பட்டது. ஆறு மாதங்களின் பின் "லெ த்ரோ த பாபா" ("பாபாவின் துளை") என அறியப்படும் ஒரு துளை மிச்செல் ரோசா (பாபா) என்பவரால் கண்டறியப்பட்டது.[4] பின்னொரு நாளில் இக்குழு சூவே குகைக்கு மீண்டும் சென்றது. இந்த குழுவின் மற்றொரு உறுப்பினரான மைக்கேல் சாபாட் ஏனைய இருவருடன் சேர்ந்து குகைக்குள் மேலும் பயணித்து இதன் இறுதி அறையான சிங்கங்களின் காட்சியகத்தைக் கண்டுபிடித்தார். இக் கண்டறிதல் பற்றிய முழுமையான தகவல்களை சூவே தனது குறிப்புகளில் கொண்டுள்ளார்.[5] ஓவியங்கள் மற்றும் பிற மனித சான்றுகளுக்கு மேலதிகமாக, பல்வேறு விலங்குகளின் புதைபடிவ எச்சங்கள், அச்சுக்கள் மற்றும் அடையாளங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றில் சில விலங்குகள் இப்போது அழிந்துவிட்டன.

பிரெஞ்சுத் தொல்பொருள் ஆய்வாளர் சீன் க்ளோட்டெசின் மேலதிக ஆய்வுகள் மூலம் இந்த தளம் பற்றி அதிகம் தெரியவந்துள்ளது. இவற்றின் காலப்பகுதிகள் பற்றிய தகவல்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தன. எனினும், 2012 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு இவ் ஓவியங்கள் அண்ணளவாக 32,000-30,000 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட ஒரிகுனேசியக் காலப் பகுதியைச் சேர்ந்ததாகக் கணிப்பிட்டது. கூடுதலாக 88 ரேடியோ கார்பன் திகதிகளைப் பயன்படுத்தி 2016 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, இரண்டு குடியிருப்புக் காலகட்டங்களைக் காட்டியது. ஒன்று 37,000 முதல் 33,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் மற்றையது 31,000 முதல் 28,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் கணிப்பிட்டது. பெரும்பாலான கறுப்பு வரைபடங்கள் முதலாவது காலகட்டத்தைச் சேர்ந்தனவாகும்.

சிறப்பம்சங்கள்

[தொகு]

இக் குகை பூதார்க் திறக்கப்படுவதற்கு முன்பு ஆர்தேசு ஆற்றின் முந்தைய போக்கிற்கு மேலே அமைந்துள்ளது. ஆர்தேசு பிராந்தியத்தின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஏராளமான குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நிலவியல் அல்லது தொல்பொருள் முக்கியத்துவம் கொண்டவை.

கதிரியக்கக் காபன் காலக்கணிப்பீட்டின் அடிப்படையில், இக்குகை இருவேறு காலப்பகுதிகளில் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அவையாவன, ஒரிகுனேசியன் மற்றும் கிராவேட்டியன் காலப்பகுதிகளாகும்.[6] பெரும்பாலான கலைப்படைப்புகள், முந்தைய, ஒரிகுனேசியக் காலப்பகுதியைச் சேர்ந்தனவாகும் (32,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு). 27,000 முதல் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பிற்கால கிராவேட்டியன் தங்குதலின் எச்சங்கள் பெரிதளவில் காணப்படாவிட்டாலும், ஒரு குழந்தையின் கால்தடங்கள், பழங்காலத்து அடுப்புகளின் எரிந்த எச்சங்கள்,[7] மற்றும் குகைகளில் ஒளியேற்றப் பயன்பட்ட தீப்பந்தங்களால் உருவான கார்பன் புகைக் கறைகள் போன்றவற்றைக் காணக்கூடியதாயுள்ளது. இங்குள்ள கால்தடங்கள் துல்லியமாக திகதியிடப்படக்கூடிய மிகப் பழமையான மனித கால்தடங்களாக இருக்கக்கூடும். குகையினுள் குழந்தையின் வரவின் பின்பு, அதன் வரலாற்று ரீதியான நுழைவாயிலை மூடிய நிலச்சரிவு காரணமாக, 1994 இல் மீளக் கண்டறியப்படும் வரை இக்குகை மனித இடையீடுகளின்றி இருந்ததாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.[8]

குகையின் மென்மையான, களிமண் போன்ற தளம், குகைக்கரடிகளின் காலடையாளங்களோடு கரடிகள் தூங்கும் "கூடுகள்" என்று நம்பப்படும் பெரிய, வட்டமான தாழ்வுகளையும் கொண்டுள்ளது. இங்கு ஏராளமான புதைபடிவ எலும்புகள் காணப்படுவதோடு இவற்றுள் குகைக்கரடிகளின் மண்டையோடுகள் மற்றும் ஐபெக்சு எனப்படும் ஒருவகைக் காட்டு மலையாடுகளின் கொம்புடனான மண்டையோடுகளும் அடங்கும்.[9] இந்த குகையில் ஒரு சிறு குழந்தை மற்றும் ஓநாய் அல்லது நாய் அருகருகே நடப்பது போன்ற காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் தகவல், வீட்டு நாயின் தோற்றம் கடைசிப் பனியுகத்துக்கு முந்தையதாக இருக்கலாமெனப் பரிந்துரைக்கின்றது.[10]

ஓவியங்கள்

[தொகு]
சூவே குகையிலுள்ள ஓவியங்களின் மாதிரி
இசுட்டெப்பு காட்டெருமையின் (பைசன் பிரிசுகசு) உரு. 2001ல் வெளியிடப்பட்ட ரோமானிய அஞ்சல் தலையில் காணப்படும் சூவே குகையிலுள்ள ஓவியங்கள்.
சிங்கங்களின் ஓவியத்தின் மாதிரி
காண்டாமிருகங்களின் கூட்டம்
மானின் ஓவியம்

நூற்றுக்கணக்கான விலங்கு ஓவியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை குறைந்தது 13 வெவ்வேறு விலங்கினங்களைச் சித்தரிக்கின்றன.இவற்றுள் சில ஏனைய பனியூழிக் காலத்து ஓவியங்களில் அரிதாகக் காட்சிப்படுத்தப்பட்ட அல்லது காணவே கிடைக்காத இனங்களாகும். பழங்கற்காலக் குகைக் கலையில் பெரும்பாலும் காணக் கிடைக்கும் தாவர உண்ணிகளான, குதிரைகள், ஆரோக்குகள், மாமூத்துக்கள் போன்றவற்றை மட்டுமே சித்தரிப்பதற்குப் பதிலாக, சூவே குகையின் சுவர்களில் பல கொன்றுண்ணி விலங்குகளான, குகைச் சிங்கங்கள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் குகைக் கழுதைப்புலிகளின் ஓவியங்களும் காணக் கிடைக்கின்றன. மேலும்,காண்டாமிருகங்களின் ஓவியங்களும் உள்ளன.[11]

பெரும்பாலான ஏனைய குகை ஓவியங்களைப் போன்றே இங்கும் முழுமையான மனித உருவங்களின் ஓவியங்கள் காணப்படவில்லை. இருப்பினும் ஒரு முழுமையற்ற சோடிக் கால்களுடன் இணைக்கப்பட்ட, பெண்குறி போலத் தோற்றமளிக்கும் உறுப்புடனான பகுதியளவான "வீனசு" உருவமொன்று காணப்படுகின்றது. வீனசுக்கு மேலே ஒரு காட்டெருமைத் தலை அதனோடு தொடர்பில் இருக்கின்றது. இதன் மூலம், சிலர் இக்கூட்டு ஓவியம் ஒரு மினோட்டூர் எனக் குறிப்பிடுகின்றனர்.[12] குகை மேற்பரப்பில் கைகளை அழுத்தி அதன் மீது நிறமியை வீசிறுவதன் மூலம் உருவாக்கப்பட்ட செங்காவிக் கை அடையாளங்கள் மற்றும் கை அச்சுக்களின் சில உருவக் காட்சிகளும் உள்ளன. குகை முழுவதும் கோடுகள் மற்றும் புள்ளிகள் போன்ற நுண்குறியீடுகளும் காணப்படுகின்றன. வண்ணத்துப்பூச்சி எனக் கருதத்தக்க அல்லது பறவை போன்ற வடிவத்தைக் கொண்ட அடையாளம் காணப்படாத இரண்டு உருக்களும் உள்ளன. இவ்வாறான பல்வேறு உருக்களின் கலவை காணப்படுவதால், வரலாற்றுக்கு முற்பட்ட காலக் கலை மற்றும் பண்பாடு தொடர்பாகக் கற்கும் சில மாணவர்கள், இவ் ஓவியங்களில் ஏதேனுமொரு சடங்கு, ஆவி வழிபாடு அல்லது மந்திரவாதம் பற்றிய தொடர்பு இருக்கலாமெனக் கருதுகின்றனர்.[13]

பிற்காலத்தில் ஒரு மானின் ஓவியத்தால் மூடப்பட்டிருந்த ஒரு வரைபடத்தில், அக்காலத்தில் உயிர்ப்புடனிருந்த சில பிராந்திய எரிமலைகளை நினைவூட்டும் விதமான குழம்பைக் கக்கும் எரிமலையைப் போன்ற ஒரு உருவும் காணப்படுகின்றது. இது எரிமலையென உறுதிப்படுத்தப்படின், இவ்வுரு எரிமலை வெடிப்பைக் காட்டும் மிகப்பழைய ஓவியமாக இருக்கும்.[14]

இந்த ஓவியங்களை உருவாக்கிய கலைஞர்கள் மற்ற குகைக் கலையில் அரிதாகக் காணப்படும் நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பல ஓவியங்கள் சுவர்களிலுள்ள சிதைவுகள் மற்றும் புடைப்புகள் போன்றன அகற்றப்பட்ட பின்னரே வரையப்பட்டவை போலத் தோன்றுகிறது. இதன் மூலம், நேர்த்தியான மற்றும் குறிப்பிடத்தக்களவு மெல்லிய மேற்பரப்பு உருவாக்கப்பட்டு ஓவியர்கள் அதன் மேல் ஓவியங்களை வரைந்துள்ளனர். அதே போன்று, சில உருவங்களின் வெளியெல்லைக் கோடுகள் செதுக்கப்பட்டு அல்லது அரிக்கப்பட்டு ஒரு முப்பரிமாணக் காட்சி அல்லது ஒரு இயங்குநிலைக் காட்சி போன்ற தோற்றப்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு "காட்சிகளு"ம் சித்தரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒன்றுடனொன்று ஊடாடுகின்ற விலங்குகளின் காட்சியைக் குறிப்பிடலாம். இங்கு, கம்பளிக் காண்டாமிருகச் சோடியொன்று, வாழிட அல்லது இனச்சேர்க்கை உரிமையைப் பெறும்பொருட்டு, கொம்புகளால் மோதிக்கொள்ளும் போட்டியைச் சித்தரிக்கும் ஓவியம் குறிப்பிடத்தக்கது.[15]

காலப்பகுதி

[தொகு]

"ஓவியங்கள், தீப்பந்த அடையாளங்கள் மற்றும் நிலத்திலிருந்து பெறப்பட்ட கரும் பொருள்களின்" மீதான கதிரியக்கக் கரிமத் திகதியிடல் அடிப்படையில் உலகின் பழமையான சில ஓவியங்கள் இக் குகையில் இருப்பதாக சீன் குளோட்டெசு குறிப்பிடுகிறார். "இத் திகதிகள், இற்றைக்கு 27000-26000  ஆண்டுகளுக்கு முன் மற்றும் இற்றைக்கு 32000-30000  ஆண்டுகளுக்கு முன் ஆகிய இரு கால அளவுகளுக்குள் அடங்குகின்றன." எனக் குளோட்டசு முடிவு செய்கிறார்.[2] 1999 வரை, குகையிலிருந்து எடுக்கப்பட்ட 31 மாதிரிகளின் காலம் முடிவுசெய்யப்பட்டுள்ளது. "வலயம் 10" இலிருந்து எடுக்கப்பட்ட கிஃபா 99776 எனும் இற்றைக்கு 32,900 ± 490  ஆண்டுகளுக்கு முற்பட்ட மாதிரியே காலத்தால் மிகவும் முற்பட்டது.[16]

சில தொல்பொருளியலாளர்கள் இக் காலக்கணிப்பைக் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். கிறித்தியன் சூக்னர் ஏனைய, உறுதியாகத் திகதியிடப்பட்ட களங்களில் காணப்படும் ஒரே மாதிரியான ஓவியங்களின் பாணியை ஒப்பிட்டதன் அடிப்படையில், சிவப்பு நிற ஓவியங்கள் கிராவெட்டியன் காலப்பகுதிக்கு (அண். இற்றைக்கு 28,000–23,000  முன்) உரியனவெனவும், கறுப்பு நிற ஓவியங்கள் முன் மக்தலேனியக் காலப்பகுதிக்கு (அண். இற்றைக்கு 18,000 – 10,000  முன் காலத்தின் முற்பகுதி) உரியனவெனவும் கருத்துத் தெரிவித்தார்.[17] இத் திகதியிடல், மரபு ரீதியான ஓவியப்பாணி வரிசையுடன் பொருந்தவில்லையென வாதிடும் பெட்டிட் மற்றும் பான் ஆகியோர், ஓவியங்களை வரையப் பயன்படுத்தப்பட்ட கரியின் மூலம் தொடர்பான உறுதியின்மை மற்றும் வெளித்தெரியும் பாறை மேற்பரப்புக்களின் மீதான மேற்பரப்பு மாசுபாட்டின் அளவு பற்றியும் கேள்வியெழுப்பியுள்ளனர்.[18][19][20] ஓவியப் பாணி தொடர்பான ஆய்வுகள், கறுப்பு ஓவியங்களோடு சில கிராவெட்டியன் செதுக்கல்கள் கலந்திருப்பதைச் சுட்டிக்காட்டுவதோடு அவ்வோவியங்கள் மிகவும் பழமையானவை என உறுதிப்படுத்துகின்றன.[21]

2011 அளவில், 80க்கும் மேற்பட்ட கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்புகள் இக்குகையில் எடுக்கப்பட்டுள்ளன. இவை, தீப்பந்தக் குறிகள், ஓவியங்கள், விலங்கு எலும்புகள் மற்றும் குகைத் தரையிலிருந்து எடுக்கப்பட்ட கரி போன்ற பல்வேறு மாதிரிகளிலிருந்து பெறப்பட்டன. இம் மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட கதிரியக்கக் கரிமக் காலப் பகுதிகள், சூவே குகை 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றும் 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இருவேறு காலப்பகுதிகளில் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.[22] இதன் மூலம், இக்குகையில் மனித இருப்பு மற்றும் ஓவியங்களின் காலம் ஒரிகுனேசியக் காலப்பகுதிக்குள் உள்ளடங்குகின்றன.

மே 2012 இல் சவோய் பல்கலைக்கழகம், ஐக்சு-மார்செல்லே பல்கலைக்கழகம் மற்றும் சென்டர் நெசனல் டி பிரீகிசுடோரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் அறிவியல் தேசியக் கல்விக்கழகக் குறிப்பேட்டில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், இவ்வோவியங்கள் 30,000இலிருந்து 32,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரிகுனேசியக் காலப்பகுதிக்குரிய மக்களால் உருவாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள், குகையின் ஒரே நுழைவாயிலாகக் கருதப்படும் பாறைச் சரிவு மேற்பரப்புகளின் புவிப்புறவியல் மற்றும் 36
Cl
திகதியிடல் மூலமான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. சுமார் 29,000 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்த பாறையால் நுழைவாயில் மூடப்பட்டது என அவர்களின் பகுப்பாய்வு காட்டியது. அவர்களின் ஆய்வு முடிவுகளின் படியான குகையில் மனித இருப்பு மற்றும் ஓவியங்களின் காலப்பகுதியும் கரிமக்காலக்கணிப்பு மூலம் உய்த்தறியப்பட்ட காலப்பகுதியும் ஒத்துப்போகின்றன. இக்காலப்பகுதி இற்றைக்கு 32,000–30,000 ஆண்டுகளுக்கு  முற்பட்டதாக உள்ளது.[23][24]

அதே ஆய்விதழில், 2016ல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், முன்பு வெளியிடப்படாத சில கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு முடிவுகளையும் உள்ளடக்கிய 259 மாதிரிகளின் காலத்தை ஆய்வு செய்ததன் மூலம் குகையில் மனித இருப்பு இருவேறு காலகட்டங்களில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலப்பகுதி 37,000இலிருந்து 33,500 ஆண்டுகளுக்கு முன்பாகவும், அடுத்தது 31,000இலிருந்து 28,000 ஆண்டுகளுக்கு முன்பாகவும் காணப்படுகிறது. இரண்டு கறுப்பு ஓவியங்களுக்கான காலப்பகுதிகளைத் தவிர மற்ற அனைத்தும் முந்தைய காலகட்டத்துக்குட்பட்டனவாகும். இவ்வாய்வின் ஆய்வாசிரியர்கள் முதல் கட்டம் பாறை வீழ்ச்சியால் குகையின் வாயில் மூடப்பட்டதோடு முடிவடைந்தது என்று நம்புகிறார்கள். மேலும் இரு பாறை வீழ்ச்சிகள் இரண்டாம் குடியிருப்புக் காலத்தின் முடிவுக்கு வழிகோலியதாகவும், அதன் பின் இக்குகை மீளக் கண்டறியப்படும்வரை, எந்த மனிதரோ அல்லது பெரிய வில்ங்குகளோ இக்குகைக்குள் நுழையவில்லையெனவும் அவர்கள் கருதுகின்றனர்.[25] லொசு ஏஞ்சலீசு டைம்சுக்கு அனுப்பபட்ட மின்னஞ்சலொன்றில் இரு ஆய்வாசிரியர்கள் பின்வரும் விளக்கத்தைக் கொடுத்துள்ளனர்.

36,000 ஆண்டுகளுக்கு முன்பான முதற் காலப்பகுதியில் பண்பாட்டுக் காரணங்களுக்காக ஒரு மனிதக் குழு (குழுமம் அல்லது குடி) சூவே குகைக்குள் நுழைந்துள்ளது. இவர்கள் பெரிய பாலூட்டி விலங்குகளின் கறுப்பு ஓவியங்களை உருவாக்கியுள்ளனர். பின்னர், சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், இன்னொரு இடத்திலிருந்து வேறொரு பண்பாட்டைக் கொண்ட பிறிதொரு குழு குகைக்குள் வந்துள்ளது.[26]

2020ல், ஆய்வாளர்கள் புதிய இன்ட்கல்20 கதிரியக்கக்கரிம அளவுதிருத்தல் வளையியைப் பயன்படுத்தி இக்குகையின் மிகப்பழைய ஓவியம் 36,500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளனர்.[27]

சூவே குகையில் நடத்தப்பட்ட காலக்கணிப்புக்கு இணையாக 2008 முதல், குகையை ஆய்வுசெய்வதற்குப் பொறுப்பான அறிவியல் குழுவின் பல உறுப்பினர்கள் சூலியன் மோனியின் வழிகாட்டுதலின் கீழ் ஆர்தேசு ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் உள்ள ஏனைய பாறை ஓவியத் தளங்களில் காலவரிசை ஆய்வை மேற்கொண்டனர்.[28] இவ்வாய்வு பொயின்ட்சு குகையில் (ஐகூசி; கார்ட்; பிரான்சு) நடைபெற்றது. இவ்வோவியங்கள் சூவே குகை ஓவியங்கள்[29] மற்றும் டூக்சு ஓவேர்ச்சர் குகை ஓவியங்கள்[30] ஆகியவற்றோடு வெளிப்படையான குறியீட்டு உருவமைப்பு ஒற்றுமைகளைக் காட்டுகின்றன. "டேட்டசன் குரோட்டெசு ஆர்னீசு" (அல்லது DGO) திட்டம் எனும் பெயரில் குறிக்கப்படும் இவ்வாய்வில், இப்பகுதியின் பாறை ஓவியக் குகைகள் ஆராயப்பட்டு இவ்வோவியங்களுக்கான நோக்கம் என்ன என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. DGO திட்டமானது, காலவரிசை மற்றும் குறியீட்டு உருவமைப்பியல் அடிப்படையில், "ஏனைய பகுதிகளிலிருந்து" சூவே குகையின் விதி விலக்கான போக்கை, அதனை ஒரு வலயத்துக்குட்பட்ட மாதிரியாகக் கருதி ஆராய்வதற்குப் பரிந்துரைக்கிறது. இந்த ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது (2020). இருப்பினும், சூவே குகையின் காலவரிசை குறித்து மறைமுகமாக இது ஏற்கனவே பல முடிவுகளைத் தந்துள்ளது.[31][32][33]

குகைக் கழுதைப்புலி (குரோகுடா குரோகுடா இசுபெலியா) ஓவியம்

பேணல்கள்

[தொகு]

1994இலிருந்து இக்குகை பொதுமக்கள் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளது. அல்தாமிரா மற்றும் லசுகா போன்ற அலங்கரிக்கப்பட்ட குகைகளில் 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக, குகைக்குள் நுழைவதற்கான அனுமதி மிகவும் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. இக்குகைகளில் பெருமளவிலான பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டமையால் குகையின் சுவர்களில் பூஞ்சைகள் வளர்ந்து சில இடங்களில் ஓவியங்களையும் சேதமாக்கியுள்ளன. 2000ம் ஆண்டில், தொல்பொருளியலாளரும், குகை ஓவிய வல்லுநருமான டொமினிக் பஃப்ஃபியர் என்பவர் குகையைப் பாதுகாக்கவும் முகாமைத்துவம் செய்யவும் நியமிக்கப்பட்டார். இவருக்குப் பின், 2014ல் மரீ பார்டிசா நியமிக்கப்பட்டார்.

"ஃபோ லசுகா" என அழைக்கப்படும் சூவே குகையின் முழுமையான மாதிரியான கவேர்ன் டு பூதார்க் 25 ஏப்ரல் 2015ல் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.[34] இது உலகளவில் உருவாக்கப்பட்ட குகை மாதிரிகளிலேயே மிகப்பெரியதாக உள்ளதோடு, லசுகா மாதிரியிலும் பார்க்கப் பத்து மடங்கு பெரியதாகும். சூவே குகையிலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் நிலமட்டத்துக்கு மேலே அமைக்கப்பட்ட வட்டவடிவக் கட்டடத்தில், நிலக்கீழ் சூழலின் சுருக்கப்பட்ட மாதிரியில், ஓவியங்கள் முழு-அளவில் மீளுருவாக்கப்பட்டன.[35] கவனமாக மீளுருவாக்கப்பட்ட அமைதி, இருள், வெப்பநிலை, ஈரப்பதன் மற்றும் ஒலியியல் அம்சங்கள் பார்வையாளர்களின் புலன்களைத் தூண்டுகின்றன.[36] முப்பரிமாணப் படிமங்களால் உருவாக்கப்பட்ட ஒரு குகையின் மெய்நிகர் தோற்றப்பாட் பரணிடப்பட்டது 2021-06-30 at the வந்தவழி இயந்திரம்டையும் பொதுமக்கள் காண முடியும்.

பரவலர் பண்பாட்டில்

[தொகு]

டிசம்பர் 18, 2020ல், சூவே குகை கண்டறியப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவுறுவதைக் குறிக்கும் வகையில் கூகிள் நிறுவனம் ஒரு கூகிள் டூடிளை வெளியிட்டது.

எழுத்தாளரான கிம் இசுட்டேன்லி ரொபின்சன் தனது 2013 நாவலாகிய சாமன் எனும் நூலில் சூவே குகை ஓவியங்களை வரைந்தோரின் வாழ்க்கையை உருவகித்துள்ளார்.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. UNESCO. [1], June 2014.
  2. 2.0 2.1 Clottes (2003b), p. 214.
  3. France 24. "UNESCO grants heritage status to prehistoric French cave" பரணிடப்பட்டது 2018-01-07 at the வந்தவழி இயந்திரம், June 2014.
  4. Hammer, Joshua (April 2015). "Finally, the Beauty of France's Chauvet Cave Makes its Grand Public Debut". Smithsonian (in ஆங்கிலம்). Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 20 August 2018.
  5. Chauvet, Jean-Marie; Deschamps, Eliette Brunel; Hillaire, Christian; Clottes, Jean; Bahn, Paul (1996). Dawn of art : the Chauvet Cave : the oldest known paintings in the world. New York: H.N. Abrams. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-3232-6.
  6. See the section on Dating.
  7. Ferrier, Catherine; Debard, Évelyne; Kervazo, Bertrand; Brodard, Aurélie; Guibert, Pierre; Baffier, Dominique; Feruglio, Valérie; Gély, Bernard et al. (2014-12-28). "Heated walls of the cave Chauvet-Pont d'Arc (Ardèche, France): characterization and chronology". PALEO. Revue d'archéologie préhistorique (25): 59–78. பன்னாட்டுத் தர தொடர் எண்:1145-3370. http://journals.openedition.org/paleo/3009. பார்த்த நாள்: 2019-10-25. 
  8. Curtis, Gregory (2006). The Cave Painters: Probing the Mysteries of the World's First Artists. New York: Knopf, pp. 215–16.
  9. "Smithsonian Magazine, December 2010". Smithsonianmag.com. 2017-06-21. Archived from the original on 2013-11-02. பார்க்கப்பட்ட நாள் 2018-01-31.
  10. Hobgood-Oster, Laura (2014). A Dog's History of the World. Baylor University Press. pp. 6–7.
  11. Adams, Laurie (2011). Art Across Time (4th ed.). Mc-Graw Hill. p. 34.
  12. Thurman, Judith (23 June 2008). "First Impressions: What does the world's oldest art say about us?". The New Yorker Magazine.
  13. See, for example, Lewis-Williams (2002).
  14. "'Cave of forgotten dreams' may hold earliest painting of volcanic eruption". Nature News. 15 January 2016.
  15. Fritz, Carole; Tosello, Gilles (2007-02-21). "The Hidden Meaning of Forms: Methods of Recording Paleolithic Parietal Art". Journal of Archaeological Method and Theory (Springer Science and Business Media LLC) 14 (1): 48–80. doi:10.1007/s10816-007-9027-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1072-5369. https://www.researchgate.net/figure/Chauvet-Cave-Ardeche-France-The-Panel-of-the-Horses-An-analysis-of-the-superposition_fig16_225322460. 
  16. Clottes (2003b), p. 33. See also Chauvet (1996), p. 131, for a chronology of dates from various caves. Bahn's foreword and Clottes' epilogue to Chauvet (1996) discuss dating.
  17. Züchner, Christian (September 1998). "Grotte Chauvet Archaeologically Dated". Communication at the International Rock Art Congress IRAC ´98. பார்க்கப்பட்ட நாள் 2014-12-05. Clottes (2003b), pp. 213–14, has a response by Clottes.
  18. Pettitt, Paul; Paul Bahn (March 2003). "Current problems in dating Palaeolithic cave art: Candamo and Chauvet". Antiquity 77 (295): 134–41. doi:10.1017/s0003598x00061421. http://www.antiquity.ac.uk/ant/077/Ant0770134.htm. 
  19. Pettitt, P. (2008). "Art and the Middle-to-Upper Paleolithic transition in Europe: Comments on the archaeological arguments for an early Upper Paleolithic antiquity of the Grotte Chauvet art". Journal of Human Evolution, 2008 Aug 2. (abstract)
  20. Bahn, P., P. Pettitt and C. Züchner, "The Chauvet Conundrum: Are claims for the 'birthplace of art' premature?" in An Enquiring Mind: Studies in Honor of Alexander Marshack (ed. P. Bahn), Oxford 2009, pp. 253–78.
  21. Guy, Emmanuel (2004). The Grotte Chauvet: a completely homogeneous art? பரணிடப்பட்டது 2014-07-30 at the வந்தவழி இயந்திரம், paleoesthetique.com, February 2004.
  22. "A Chauvet Primer". Archaeology 64 (2): 39. March–April 2011. http://www.nxtbook.com/nxtbooks/archaeology/20110304/index.php?startid=39. 
  23. Agence France-Presse (May 7, 2012). "France cave art gives glimpse into human life 40,000 years ago". National Post. பார்க்கப்பட்ட நாள் May 8, 2012.
  24. Sadier, Benjamin; Delannoy, Jean-Jacques; Benedetti, Lucilla; Bourles, Didier; Jaillet, Stephane; Geneste, Jean-Michel; Lebatard, Anne-Elisabeth; Arnold, Maurice (2012). "Further constraints on the Chauvet cave artwork elaboration". Proceedings of the National Academy of Sciences 109 (21): 8002–6. doi:10.1073/pnas.1118593109. பப்மெட்:22566649. பப்மெட் சென்ட்ரல்:3361430. http://www.pnas.org/search?fulltext=chauvet&submit=yes. பார்த்த நாள்: May 8, 2012. 
  25. Anita Quiles, Hélène Valladas, Hervé Bocherens, Emmanuelle Delqué-Kolic, Evelyne Kaltnecker, Johannes van der Plicht, Jean-Jacques Delannoy, Valérie Feruglio, Carole Fritz, Julien Monney, Michel Philippe, Gilles Tosello, Jean Clottes, and Jean-Michel Geneste "A high-precision chronological model for the decorated Upper Paleolithic cave of Chauvet-Pont d’Arc, Ardèche, France" PNAS 2016 113 (17) 4670–75; எஆசு:10.1073/pnas.1523158113 [2]
  26. Netburn, Deborah (December 2016). "Chauvet cave: The most accurate timeline yet of who used the cave and when". Los Angeles Times. https://www.latimes.com/science/sciencenow/la-sci-sn-chauvet-caves-timeline-20160412-story.html. 
  27. Turney, Chris; Hogg, Alan; Reimer, Paula J.; Heaton, Tim (13 August 2020). "From cave art to climate chaos: How a new carbon dating timeline is changing our view of history". Phys.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 August 2020.
  28. Monney, Julien (2018). "La grotte aux Points d'Aiguèze, petite soeur de la grotte Chauvet et les recherches menées dans le cadre du projet "Datation Grottes Ornées"". Karstologia 72: 1-12. பன்னாட்டுத் தர தொடர் எண்:0751-7688. https://www.researchgate.net/profile/Julien_Monney/publication/329772023. 
  29. Monney, Julien (2018). "L'art pariétal paléolithique de la grotte aux Points d'Aiguèze : définition d'un dispositif pariétal singulier et discussion de ses implications". Karstologia 72: 45-60. பன்னாட்டுத் தர தொடர் எண்:0751-7688. https://www.researchgate.net/publication/329771821. 
  30. Monney, Julien (2010). "La grotte des Deux-Ouvertures : Le regard et la mémoire". Ardèche Archéologie 27: 3-12. https://www.researchgate.net/profile/Julien_Monney/publication/281474811. 
  31. Monney, Julien (2014). "Nouveaux éléments de discussion chronologique dans le paysage des grottes ornées de l'Ardèche: Oulen, Chabot et Tête-du-Lion". Paléo: 271-283. பன்னாட்டுத் தர தொடர் எண்:1145-3370. https://www.researchgate.net/profile/Julien_Monney/publication/333488921. 
  32. Monney, Julien (2014). "La grotte des Deux-Ouvertures à Saint-Martin-d'Ardèche: approches chronométriques croisées de la mise en place du massif stalagmitique (U/Th et 14C AMS): implications quant aux fréquentations humaines de la cavité et à la présence ursine dans la région". Paléo: 41-50. பன்னாட்டுத் தர தொடர் எண்:1145-3370. https://www.researchgate.net/profile/Julien_Monney/publication/278621780. 
  33. "Les restes humains de la grotte ornée paléolithique des Deux-Ouvertures (Ardèche, France)" (in en). Comptes Rendus Palevol 16 (4): 452–461. 2017-06-01. doi:10.1016/j.crpv.2017.02.001. பன்னாட்டுத் தர தொடர் எண்:1631-0683. https://www.sciencedirect.com/science/article/pii/S1631068317300209. 
  34. "Replik der Grotte Chauvet mit Höhlenmalereien". faz.net. பார்க்கப்பட்ட நாள் 25 April 2015.
  35. "Chauvet-Pont d'Arc cave, grand opening!". TRACCE Online Rock Art Bulletin. பார்க்கப்பட்ட நாள் 8 February 2015.
  36. "Conservation of prehistoric caves and stability of their inner climate: lessons from Chauvet and other French caves". Bourges F., Genthon P., Genty D., Lorblanchet M., Mauduit E., D’Hulst D. Science of the Total Environment. Vol. 493, 15 Sept. 2014, pp. 79–91 எஆசு:10.1016/j.scitotenv.2014.05.137.
  37. "Drawing Paleolithic Romania".

நூற்பட்டியல்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chauvet Cave
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Navbox prehistoric caves வார்ப்புரு:Prehistoric technology வார்ப்புரு:World Heritage Sites in France

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூவே_குகை&oldid=3794286" இலிருந்து மீள்விக்கப்பட்டது