சகுனி
சகுனி (சமசுகிருதம்: शकुनि) (ஆங்கிலம்: Shakuni) மகாபாரதக் கதையில் வரும் கௌரவர்களின் தாயான காந்தாரியின் அண்ணன் ஆவார். இவர் தனது மருமகனான துரியோதனனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் பாண்டவர்களுடன் சூதாடி, அவர்களுடைய நாட்டை தனது மருமகனுக்கு வென்று கொடுத்தார். சகுனியின் தந்தை சுபலன். சகுனியின் மகன் உல்லூகன்.
குருச்சேத்திரப் போர்க் களத்தில், சகாதேவனால் சகுனி கொல்லப்பட்டான்.
சகுனியின் சகோதரர்கள் வருஷன், அசலன்.[1]
காந்தாரி - ஓர் விதவை
[தொகு]காந்தார நாட்டு மன்னன் சுபலன் இவரின் கடைசி மகன்தான் சகுனி. காந்தாரி திருமணம் குறித்து எழுந்த சர்ச்சை குறித்து விசாரித்து வர பீஷ்மர், ஒற்றர்களை காந்தார நாட்டுக்கு அனுப்பினார். காந்தாரியின் முதல் கணவருக்கு ஆயுள் இல்லை என்றும், அதனால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கடாவுக்கு [2] மணம் செய்வித்தும், பிறகு அந்த ஆட்டை பலியிட்டதாகவும் ஒற்றர்கள் தெரிவித்தார்கள், நுணுக்கமாய் அன்றைய சாத்திரப்படி பார்த்தால் காந்தாரி ஒரு விதவை ஆவார்.
சிறையில்
[தொகு]ஆடு மட்டும் பலி கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் கௌரவர்களின் தந்தை ஆட்டுகடாவாகியிருக்கும் என்று சோதிடர்கள் கூறியது பீஷ்மர்க்கு அதிக கோபத்தைத் தூண்டியது. "என்னை சுவலன் ஏமாற்றிவிட்டான், ஒரு விதவையையா? என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன், உலகுக்கு தெரிந்தால் நகைப்புக்கு இடமாகுமே, சுவலன் குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன்" என்று சுவலனையும், அவன் மகன்களையும் பிடித்து சிறையில் அடைத்தார். ஒரு குடும்பத்தையே கொல்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் தினமும் ஒரு கைப்பிடி அரிசி மட்டும் உண்ணக்கொடுத்தார். "ஒரு குடும்பத்தையே கொல்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் அந்த நியதியை மீறாமல் சிறிது உணவே தருகிறார். இன்னும் கொஞ்சம் உணவை கேட்பதும் நமக்கு அதர்மம் எனவே பட்டினி கிடந்து தான் மடியவேண்டும். உணவு தரப்படும்போது மகளின் வீட்டிலிருந்து ஓடுவதும்" அதர்மம் என்று சுபலன் அறிந்திருந்தார். நாட்கள் செல்லச்செல்ல நிலைமை மோசமாகியது, சகோதரர்களுக்குள் உணவுக்காக சண்டை வந்தது, சுபலன் ஒரு யோசனை சொன்னான் "நம்மில் யாராவது புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் உணவை உண்டு பிழைத்து, இந்த அநியாயத்தைச் செய்த பீஷ்மரை பழிவாங்கட்டும்" இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர்.[3]
சகுனி தோற்றம்
[தொகு]வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான். குடும்பத்தில் சகுனியின் முன் பட்டினி கிடந்து ஒவ்வொருவராக மடிந்தனர். இறக்கும் முன் சுவலன் சகுனியின் கால்களில் ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்தான், "இனி நீ நடக்கும் போதெல்லாம் நொண்டுவாய், ஒவ்வொரு முறை நொண்டும் போதும் கௌரவர் செய்த அநீதியை நினைவில் கொள், அவர்களை மன்னிக்காதே" என்றார். சகுனிக்கு தாயத்தின் மீது ஒரு சபலம் உண்டு என்று சுவலனுக்கு தெரியும், சாகும் தறுவாயில் தன் மகனிடம் "நான் இறந்த பிறகு என் கை விரல் எலும்புகளை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில் என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாயக்கட்டையை போட்டாலும் நீ விரும்பியபடியே எண்ணிக்கை விழும் நீயே எப்போதும் வெற்றி பெறுவாய்" என்றார். சிறிது காலத்தில் சுவலனும், அவனது பிள்ளைகளும் இறந்துப் போயினர். சகுனி மட்டும் தப்பிப் பிழைத்து கௌரவர்களுடன் பீஷ்மரின் கவனிப்பில், பாதுகாப்பில் வாழ்ந்தான். கௌரவர்களின் நண்பனாகக் காட்டிக்கொண்டான், ஆனால் பீஷ்மர் தன் குடும்பத்தை அழித்தது போல பீஷ்மரின் குடும்ப வீழ்ச்சிக்காக திட்டமிட்டுக்கொண்டே இருந்தான்.[3]
சகுனியின் திட்டம்
[தொகு]பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அவமானப்பட்டு திரும்பிய துரியோதனன் மனமுடைந்துப் போயிருந்தான், பொறாமை எனும் தீ அவனுக்குள் பொங்கி வழிந்தது. அவர்களின் நாடு என்னுடையதைவிட செல்வமிக்கது, அவர்களின் செல்வாக்கோ மிகப் பெரியது என்ற தாழ்வான மன அழுத்தத்தில் இருந்தான். துரியோதனனின் மன ஓட்டத்தை அறிந்த சகுனி தனது திட்டத்தை அவனிடம் தெரிவித்தான். அறத்தில் தருமர் உயர்ந்தவராக இருக்கலாம், ஆனால் அவரிடம் கூட ஒரு பலவீனமுள்ளது, அவருக்கு சூதாட்டம் மிகவும் விருப்பம் அவரை சூதாட்டத்திற்கு அழையுங்கள், மோசமான ஆட்டம் ஆடுபவராக இருந்தாலும் ஒரு சத்திரியன் சூதாட முடியாது என்று சொல்லமுடியாது. "உனக்குப் பதிலாக நான் ஆடுகிறேன். நான் தாய ஆட்டத்தில் எவ்வளவு கெட்டிக்காரன் என்பது உனக்குத் தெரியும், நான் நினைக்கிறபடி தாயக்கட்டைகளை விழவைக்க முடியும், ஒவ்வொரு வெற்றியுடனும் பாண்டவர்கள் வைத்திருக்கும் எல்லாவற்றையும் உனக்கு பிடுங்கித் தருகிறேன், நீ இந்திரப்பிரஸ்தத்தின் மன்னனாக முடிசூட்டிக்கொள், பாண்டவர்கள் பிச்சைக்காரர்களாகி நிற்பார்கள்". இதற்கு துரியோதனன் இரட்டிப்பு சந்தோசமடைந்தான், ஆனால் தன் மாமன் குரு வம்சத்தையே அழிக்கப் போகிறான் என்பதை உணராத துரியோதனன்.[3]
சூதாட்டம்
[தொகு]ஹஸ்தினாபுரத்திலிருந்து சூதாட்டப்போட்டிக்கு அழைப்பு வந்தது, அதை ஏற்காவிட்டால் நன்றாக இருக்காது என்றார் தருமர். சூதாட்ட அழைப்பு வந்தபோது கிருஷ்ணன் துவாரகையில் சிசுபாலனின் சினேகிதர்களான சால்வன் மற்றும் தந்தவக்கிரனுடன் போர்புரிந்து கொண்டுருந்தார். சூதாட்ட நாளன்று கிருஷ்ணனோ,திரௌபதியோ தங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று காத்திராமல் சூதாட சென்றார்கள் பாண்டவர்கள். கௌரவர் சார்பில் சகுனியும், பாண்டவர் சார்பில் யுதிஷ்டிரனும் சூதாடினார்கள். துவக்கத்தில் பணயத்தொகை குறைவாக இருந்தது. சகுனி ஒவ்வொருமுறையும் தாயக் கட்டையை உருட்டிவிட்டு பார் நான் வென்றுவிட்டேன் என்பார். இழந்ததை எல்லாம் மீட்க வேண்டும் என்ற யுதிஷ்டிரனின் ஆசையை கிளரிவிட்டு, ஒவ்வொரு தடவையும் "நான்தான் வென்றேன், நான்தான் வென்றேன்", என்று யுதிஷ்டிரனின் விளையாட்டு வேகத்தைக் கூட்டி ஆட்டம் சூடுபிடித்து வரும் வேளையில் "போதும் நிறுத்துங்கள்" பின் வாங்குவதில் அவமானமில்லை, மதுராவை மீட்கும்போது 17 முறை கிருஷ்ணனும் பின் வாங்கியுள்ளார் என்றனர் பாண்டவர், ஆனால் தருமர் ஏற்க மறுத்துவிட்டார். பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் போன்றவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டுருந்தனர். "இந்த பைத்தியக்கார ஆட்டத்தை நிறுத்துங்கள்" என்றார் விதுரன். திருதராஷ்டிரன் கூடாது, தருமர் ஒரு மன்னன் என்பதால் அவரே முடிவு எடுக்க தகுதியுள்ளவர் என்றார்.[3]
இழப்பு
[தொகு]தருமர் சூதாட்டத்தில் தனது ரதங்கள், சேனைகள், யானைகள், குதிரைகள், பணிப்பெண்கள், பணியாட்கள், நாடு என அனைத்தையும் இழந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பதினொராவது ஆட்டத்தில் தன் சகோதரர்கள் ஒவ்வொருவராக பணயம் வைக்க தொடங்கினார். முதலில் நகுலன், பின் சகாதேவன், தொடர்ந்து பீமன், வில்வித்தையில் தேர்ந்த அருச்சுனன் என எல்லோரையும் இழந்தார். இறுதியில் தருமர் தன்னையே வைத்து இழந்தார். ஆனால் ஆட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை. "திரெளபதியை பணயமாக வைக்கப்போகிறேன்" என்றார், மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் அதிர்ந்தார்கள் துரியோதனன் புன்னகைத்து பணயத்தை ஏற்றுக்கொண்டார். பதினேழாவது முறையாக சகுனி தாயக்கட்டையை உருட்டினார். "பார் நான்தான் வென்றேன்" என்றார், அனைத்தையும் இழந்து நின்றார் தருமர். துரியோதனன் தம்பி துச்சாதனனை அழைத்து திரௌதியை சூதாட்ட மண்டபத்திற்கு வழுக்கட்டாயமாக இழுத்து வரச்செய்து துகிலுரியச் செய்தான். தொடர்ந்து பாண்டவர்களையும் அவ்வாறே செய்ய துரியோதனன் கட்டளையிட்டான் யாரும் எதுவும் பேசவில்லை, மூத்தவர்கள் பீஷ்மர் உட்பட அனைவரும் அமைதி காத்தனர்.[3]
இவர் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனால் குருச்சேத்திரப் போரில் கொல்லப்பட்டார். சகுனியின் மகன் உல்லூகன் அபிமன்யுவால் கொல்லப்பட்டான்.