கூட்டு ஒழுங்கு
Appearance
கூட்டு ஒழுங்கு என்பது செந்நெறிக் காலக் கட்டிடக்கலையின் ஒழுங்குகளாகக் கருதப்படும் ஐந்து ஒழுங்குகளுள் ஒன்று. இது ஒரு கலப்பு ஒழுங்கு ஆகும். இது அயனிய ஒழுங்குப் போதிகையின் சுருள்வடிவப் பகுதியும், கொறிந்திய ஒழுங்கின் அகாந்தசு இலை வடிவ அழகூட்டல்களும் ஒன்றிணைந்து உருவானது. கூட்டு ஒழுங்கின் சுருள் வடிவப் பகுதி பெரியது. இவ்வொழுங்கில் தூணின் உயரம் அதன் விட்டத்தின் 10 மடங்கு ஆகும்.
மறுமலர்ச்சிக் காலம் வரை, கூட்டு ஒழுங்கு தனியான ஒரு ஒழுங்காகக் கருதப்படவில்லை. இது கொறிந்திய ஒழுங்கின் பிற்கால ரோம வடிவமாகவே கொள்ளப்பட்டது. ரோமில் உள்ள போரத்தில் உள்ளதும், கிபி 82 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதுமான டைட்டசின் வளைவு என்னும் அமைப்பே கூட்டு ஒழுங்கின் முதலாவது எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுகின்றது.