Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கணாபத்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணாபத்தியம் என்பது விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் இந்துசமயப் பிரிவாகும்.[1]

இந்து சமயத்தில் விநாயகரை வழிபடுதல் என்பது ஏனைய பிரிவுகளிலும் காணப்படும் நடைமுறையாகும். அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களும், வழிபாடுகள், பணிகள் மற்றும் சமய நிகழ்வுகள் ஆகியவற்றை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவர்.

கணபதி வழிபாடு, சைவ சமயத்தின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது. காணாபத்தியப் பிரிவு பெரும்பாலும் ஆறாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோற்றம் பெற்றிருக்கலாம். இது பற்றிய குறிப்பு சிறீ ஆனந்திகிரியால் எழுதப்பட்ட சங்கர திக்விஜய (ஆதிசங்கரரின் வாழ்வு) எனும் நூலில் காணப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இப்பிரிவு அதன் உச்ச நிலையை அடைந்தது. இதன்போது விநாயகருக்காக கோயில்களும் கட்டப்பட்டன. இவற்றுள் மிகப்பெரியது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் (ஆயிரங்கால் மண்டபம்) ஆகும். இப்பிரிவில் விநாயகரே முழுமுதற் கடவுளாக வழிபடப்பட்டார்.

பின்னர், மொரயா கோசாவி என்பவரால் இப்பிரிவு பிரபலமடைந்தது. ஒரு ஆதாரத்தின் படி, இவர் மனிதக் கைகளால் உருவாக்கப்படாத விநாயகர் சிலையொன்றை உருவாகியதாகவும், மோர்கான் கோவிலைக் கட்டியதாகவும் அறிய முடிகிறது. புனேக்கு அருகில் உள்ள இக்கோவில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[மேற்கோள் தேவை] இன்னொரு ஆதாரத்தின் படி, இவர் மோர்கான் கோவிலில் விநாயகரைத் தரிசித்ததாகவும், பின்னர் 1651ல் இவரது பிறந்த ஊரான சின்வாத்திலுள்ள விநாயகர் கோவிலொன்றில் சமாதியடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.[2]

இவரைத் தொடர்ந்து, சின்வாத்தைச் சுற்றியுள்ள மேற்கிந்தியாவின் மகாராஷ்டிரப் பகுதிகளில் 17ம் நூற்றாண்டுக்கும், 19ம் நூற்றாண்டுக்கும் இடையில் காணாபத்தியப் பிரிவு முதன்மை பெற்றது. தற்போதும் இப்பிரிவு மகாராஷ்டிராவின் மராத்தி மொழி பேசும் பகுதிகளில் வசிக்கும் உயர்சாதி இந்துக்களிடையே முக்கிய பிரிவாகக் காணப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவிலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பக்தர்கள் ஆண்டுதோறும் சின்வாத்துக்கும் மோர்கானுக்கும் இடையில் யாத்திரை மேற்கொள்வர்.

இப்பிரிவைச் சேர்ந்தோர் தமது சமயக் குறியீடாக நெற்றியில் குங்குமப் பொட்டிடுதல், தமது தோள்களில் யானை முகம் மற்றும் தந்தங்களின் உருவங்களை பொறித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்துவர்.[3][4]

கணாபத்திய நூல்கள்

[தொகு]

கணபதி உபநிடதம், கேரம்ப உபநிடதம், சுப்ரபேத ஆகமம், விநாயகர் கவசம், விநாயகர் அகவல், கணேச பஞ்சரத்தினம், கணேச புராணம்,முத்கலபுராணம்,மகா நிர்வாண தந்திரம், வெற்றி வேட்கை, பிள்ளையார் கதை, முத்தவினாயகர் திருவிரட்டை மணிமாலை முதலிய நூல்கள் கணாபத்திய நூல்களாக கொள்ளப்படுகின்றன.

இந்து சமய தொடர்பு

[தொகு]

இந்துசமயத்தில் விநாயகர் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மூத்த பிள்ளையாக காணப்படுகின்றார்.ஆலயமாகினும் வீட்டு கிரியைகளானாலும் விநாயகருக்கே முதல் வணக்கம் செலுத்தப்படும் .இந்துசமயக் கோயில்களிலே விநாயகருக்கு பூஜை செய்த பின்னரே ஏனைய பூஜைகள் இடம்பெறும். எந்தக் கோவிலானாலும் விநாயகருக்கும் ஒரு சிறு கோவில் உள்ளமைகபட்டிருக்கும்.

இந்துக்கள் வீடுகளில் எந்த காரியத்தையும் செய்ய தொடங்கு முன்னர் சாணத்தினால் பிள்ளையார் பிடித்து அதில்அருகம்புல் செருகி விநாயகரை வழிபடுவார்கள். திருமண நிகழ்வுகளின்போது அரைத்த மஞ்சளால் விநாயகர் பிடித்து வைத்து வழிபாடு செய்வர். மக்கள் விநாயகருக்குரிய சிறப்பான விரதங்களான விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சஸ்டி, சுக்கிரவாரம் முதலிய விரதங்களையும் அனுஷ்டித்து அருள்பெறுகின்றனர்.

இந்துக்கள் எதனை எழுததொடங்கும் முன்னும் பிள்ளையார் சுழி இட்டே எழுதுவர். நூலாசிரியர்களும் மற்றும் புலவர்களும் இலக்கியங்களை இயற்றும்போது காப்புச் செய்யுளில் விநாயகருக்கு வணக்கம் செலுத்திய பின்னரே இலக்கியங்கள் இயற்றுவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ganapatyas பரணிடப்பட்டது 2006-01-28 at the வந்தவழி இயந்திரம் Article from PHILTAR, Division of Religion and Philosophy, St Martin's College
  2. GĀṆapatyas Article from BookRags.com
  3. "Ganpatya - Hindupedia, the Hindu Encyclopedia". www.hindupedia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
  4. "The Ganapatya Sect". www.saivism.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
  • அருண் நிலையம் வெளியிட்ட இந்தியாவில் சமயங்கள் புத்தகம். ஆசிரியர்-முனைவர் வெ. சுயம்பு.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணாபத்தியம்&oldid=3714614" இலிருந்து மீள்விக்கப்பட்டது