இயற்பியலின் வரலாறு
இயற்பியல் (பண்டைய கிரேக்கம்: φύσις, ஆங்கிலம்: Physics) என்பது அறிவியலின் ஒரு அடிப்படை பிரிவு ஆகும். இயற்பியல் என்பதன் ஆங்கிலப் பெயர் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதற்கு இயற்கை என்பது பொருள். இப்பிரிவு இயற்கையினை பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவுகிறது. இயற்பியல் இயற்கையின் பொருட்களைப் பற்றியும் அதன் ஆற்றலைப் பற்றியும் படிக்க உதவுகின்றது. இத்துறை மிகவும் பழமையானது, மேலும் அடிப்படை அறிவியல் கோட்பாடுகளினால் உருவாக்கப்பட்டது. பொருட்களும், ஆற்றலும் இயற்கையின் மிக முக்கியமான கூறுகள் என்பதால் இயற்பியலின் மூலம் அனைத்து வகையான கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்ள முடியும்.
இயற்பியல் துறையைப் போல் அல்லாமல் மற்ற அறிவியல் துறைகள் தனக்கென்று ஒரு எல்லைகளை வரையறுத்துள்ளன. அதனால் சில பொருட்களைப் பற்றியும் அதன் இயக்கங்களைப் பற்றியும் மட்டுமே அத்துறைகளில் படிக்க இயலும். அனைத்து அறிவியல் துறைகளும் இயற்பியலின் மூலம் வளர்ந்து பின்னர் தனித்துறையாக மாறியதாக கருதப்படுவதும் உண்டு. பொதுவாக இயற்பியலில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று பாரம்பரிய இயற்பியல் இரண்டாவது நவீன இயற்பியல்.
பண்டைய வரலாறு
[தொகு]இயற்பியலின் கூறுகள் வடிவியலின் உதவியுடன் இயங்கக்கூடிய பிரிவுகளான வானவியல், இயந்திரவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. கணித கோட்பாடுகளின் மூலம் இயற்பியலை வரையறுப்பது ஹெலனிய கால பண்டைய எழுத்தாளர்களான ஆர்க்கிமிடிஸ், தாலமி மற்றும் பாபிலோனியர்கள் காலத்திலிருந்தே தொடங்கப்பட்டது. பண்டைய மெய்யியல் அறிஞர்கள் தமது கருத்துக்கள் மூலம் இயற்பியலை விளக்க முற்பட்டனர். உதாரணத்திற்கு அரிஸ்டாட்டிலின் நான்கு வகையான காரணங்கள்.
பண்டைய கிரேக்கம்
[தொகு]இயற்கையையும் அதன் கோட்பாடுகளையும் புரிந்து கொள்ள கிரேக்கர்கள் கிமு 650 முதலே முற்படுகின்றனர். சாக்கிரட்டீசிற்கும் முன்பு வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞரான தேலேஸ் அறிவியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். ஏனெனில் இவர் மதக்கோட்பாடுகளையும், மூடநம்பிக்கைகளையும் மறுத்து ஒவ்வொரு நிகழ்விற்கும் பின் அறிவியல் காரணங்கள் உள்ளது என்று அறிவுறுத்தினார்.[1] தேலேஸ் கி.மு. 580 இல் சில அறிவியல் முடிவுகளையும் வெளியிட்டார். அதன்படி தண்ணீர்தான் அனைத்து பொருட்களுக்கும் அடிப்படைக்கூறு என்று கூறினார். உராயப்பட்ட பசை மற்றும் காந்தங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையை பற்றியும் விளக்கினார். இவரே முதல் முறை பதிவு செய்யப்பட்ட அண்டவியல் கோட்பாடுகளை கூறியவர். அனாக்சிமாண்டர் என்னும் மெய்யியல் அறிஞர் அவரின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்காக நன்கு அறியப்படுபவர் ஆவார். இவர் தேலேஸின் கோட்பாடுகளிற்கு மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டார் . அதன்படி நீருக்கு பதிலாக எபிரான் எனும் பொருள் அனைத்துப் பொருட்களுக்கும் மூலக்கூறு என்று கூறினார். ஹெராக்லிடஸ் என்பவர் கிமு 500 வாக்கில் அடிப்படை இயற்பியல் விதி ஒன்றை உருவாக்கினார். அவ்விதியின் படி இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு பொருளுமே நிலையான தன்மையில் இருப்பது இல்லை என்றும், அவை மாறிக்கொண்டே இருக்கும் என்றும் கூறினார். இவ்விதியினால் செவ்வியற்பியலின் அறிஞராக இவர் கருதப்படுகிறார். கி.மு 5,4, 3 ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்கத்தில் செவ்வியற்பியல் மெதுவாக வளரத் தொடங்கியது. பிளேட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டில் கி.மு 4 இல் மீவியற்பியலில் கோட்பாடுகளை வகுத்தார். இவர் வெளியிட்ட விதிகள் அரிஸ்டாட்டிலின் இயற்பியல் என்று வழங்கப்பட்டது. அதில் அவர் இயக்கங்கள் பற்றியும், ஈர்ப்பு விசைகள் குறித்தும் கூறியிருந்தார். அரிஸ்டாட்டில் ஈத்தர் எனும் ஒரு பொருளினால் உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களும் உருவாகி இருக்க வேண்டும் அல்லது பூமி, காற்று, வானம், நெருப்பு ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியா மற்றும் சீனா
[தொகு]பண்டைய இந்தியாவிலும் இயற்பியல் கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. புத்த மதத்தை தோற்றுவித்தவரான கௌதம புத்தர் அணுக்களின் கட்டமைப்பு பற்றி கூறியுள்ளார். ஆரியபட்டா முதன்முதலாக புவியின் சுழற்சி பற்றி கூறிய அறிஞர் ஆவார். சென் கோ என்பவர் பண்டைய சீனாவில் புவிஈர்ப்புவிசை பற்றிய கொள்கைகளை உருவாக்கினார். காந்தத்தை பயன்படுத்தி உண்மையான வடதிசையை கண்டுபிடிக்கும் யுக்தியை பயன்படுத்தி முதன்முதலாக காந்தத் திசைகாட்டி உருவாக்கியவரும் இவரே ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "This shift from ecclesiastical reasoning to scientific reasoning marked the beginning of scientific methodology." Singer, C., A Short History of Science to the 19th Century, Streeter Press, 2008, p. 35.