Nothing Special   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

இலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
சிவ வடிவங்களில் ஒன்றான
இலிங்கம்
வாராணாசியில் உள்ள இலிங்கத்திற்கு பூசை செய்தல்
வாராணாசியில் உள்ள இலிங்கத்திற்கு பூசை செய்தல்
தேவநாகரி: ப.ச.ரோ.அ: liṅgaṃ
வேறு பெயர்(கள்): லிங்க மூர்த்தம்,
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: அருவுருவ வடிவ சிவமூர்த்தம்
துணை: பார்வதி
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்
This image is from an authentic publish of ASI on Saluvankuppam Temple located near Mahabalipuram, Tamilnadu, India

இலிங்கம், லிங்கம் (ஒலிப்பு) (lingam), அல்லது சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.

சொல்லிலக்கணம்

லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது. வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத அகராதி 7 பொருள்களை இச் சொல்லுக்குக் கொடுத்துள்ளது. இவற்றுள், லிங்கம் பல வகைப்படும். முகலிங்கம், சகஸ்ர லிங்கம், தாராலிங்கம், சுயம்பு லிங்கம் மேலகடம்பூர் என்ற ஊரில் அமிர்ததுளீ விழ்ந்து சுயம்பு லிங்கமானது

  • இறைவனின் வடிவம்
  • நோய்க்கான அறிகுறி
  • ஒரு புள்ளி அல்லது மறு
  • சான்று அல்லது சான்றுக்கான வழிமுறை
  • விளைவு அல்லது முதற் காரணத்தில் இருந்து உருவாகும் ஒன்று.
  • பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு.

என்பனவும் அடங்கும்.

பெயர்க் காரணம்

லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்[1].

வழிபாட்டின் தோற்றம்

இலிங்க வழிபாட்டின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் தரப்படுகிறன. இறந்தோர்களை புதைக்கும் போது, அவர்களின் நினைவாக நடுகல் வைத்து வணங்கும் வழக்கும் உள்ளது. அவ்வழக்கம் இலிங்க வழிபாட்டின் தோற்றமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தொன்மம்

சைவ சமயத்தில் இலிங்கத்தின் தோற்றத்தாக கூறப்படும் கதையானது. ஒரு முறை பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது அங்கு சிவபெருமான் தோன்றி, தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றீர்களோ, அவர்களே பெரியவர் என்று கூறினார். அதற்கு இருவரும் சம்மதித்தனர். சிவபெருமான் நீண்ட தீயாக மாறினார். அவருடைய முடியைக் காண பிரம்மா அன்னப் பறவை வடிவம் எடுத்து மேலே பறந்து சென்றார். திருமால் அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிக் கொண்டு சென்றார். இருவராலும் அடியையும், முடியையும் காணது தோற்றனர். இந்த சிவபெருமானின் வடிவத்தினை லிங்கோற்பவம் என்று கூறுகின்றனர்.

முன்னோர்களின் நினைவாக நடுகல்

பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் பல பகுதிகளில் சைவர்களின் நடுகல் கற்கள் காணப்படுகின்றன. [சான்று தேவை] சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள் [சான்று தேவை]

இலிங்க அமைப்பு

இலிங்க பாகங்கள்; பூமி பிரம்ம பாகம், பீடம் விஷ்ணு பாகம், பூஜைப் பகுதி ருத்திர பாகம்
இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு, பிரம்ம பாகங்கள்
இலிஙகத்தின் பாகமான சக்தி பாகம்

லிங்கம் வானத்தைக் குறிக்கும்.ஆவிடை பூமியைக் குறிக்கும்.விண்ணுக்கும் மண்ணுக்குமாகா சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது[2].மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்தைக் குறிக்கும் அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும்.இதன் காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர்[3].

மற்றோரு கருத்தின்படி இலிங்கம் என்பது பழங்காலத்தில் வெறும் நடுவில் உள்ள தூணை மட்டுமே உடையதாக இருந்தது என்றும் ஆவுடையார் வடிவம் பின்னாட்களில் அபிஷேக நீர் வடிதலுக்காகத் தோன்றிய அமைப்பு என்றும் கூறுவர்.

மூன்று பாகங்கள்

இலிங்க வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.

ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்ர பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். இந்த ருத்ர பாகத்திற்கு மட்டுமே பூசைகள் நடைபெறுகின்றன. இந்த ருத்ர பாகத்தின் மீது நீர் படும்படி தாராபாத்திரம் அமைக்கப்படுகிறது. வெப்பம் குறைவான காலங்களில் நாகாபரணம் சூட்டப்படுகிறது. விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.

இலிங்க வகைகள்

சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து இலிங்கங்களை தோற்றுவித்தார்.[4] இவை பஞ்ச இலிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.

  1. சிவ சதாக்கியம்
  2. அமூர்த்தி சதாக்கியம்
  3. மூர்த்தி சதாக்கியம்
  4. கர்த்திரு சதாக்கியம்
  5. கன்ம சதாக்கியம்

இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், இலிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன,

  1. சுயம்பு இலிங்கம் - தானாய் தோன்றிய இலிங்கம்.
  2. தேவி இலிங்கம் - தேவி சக்தியால் வழிபடப்பட்ட இலிங்கம்.
  3. காண இலிங்கம் - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட இலிங்கம்.
  4. தைவிக இலிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட இலிங்கம்.
  5. ஆரிட இலிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட இலிங்கம்.
  6. இராட்சத இலிங்கம் - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.
  7. அசுர இலிங்கம் - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.
  8. மானுட இலிங்கம் - மனிதர்களால் பூசை செய்யப்பட்ட இலிங்கம்.

இவை தவிர பரார்த்த இலிங்கம். சூக்கும இலிங்கம்,ஆன்மார்தத இலிங்கம், அப்பு இலிங்கம், தேயு இலிங்கம், ஆகாச இலிங்கம், வாயு இலிங்கம், அக்னி இலிங்கம் என எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன.

பெரிய கோவில்

மிகப்பெரிய லிங்கம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் ஆகும்.இது 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது.

சிவலிங்கங்கள்

இவற்றையும் காண்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lingam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

  1. பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு புத்தகம், பக்கம் 24
  2. பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு எனும் அறிவானந்தத்தின் நூலில் 24 ஆம் பக்கத்தில்
  3. பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு எனும் அறிவானந்தத்தின் நூலில் 24 ஆம் பக்கம்
  4. நயன்தரும் சைவசித்தாந்தம் (நூல்) - நா ஞானகுமாரன் பக்கம் 38

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிங்கம்&oldid=3913605" இலிருந்து மீள்விக்கப்பட்டது